தோற்றாலே இப்படித்தான்! – தோனியை விமர்சிப்போர் பட்டியலில் ஷேவாக்கும் இணைந்தார்!

புதுடெல்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான சென்னை கேப்டன் தோனியின் ஆட்டத்தை, இந்திய முன்னாள் வீரர் ஷேவாக்கும் விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோனியின் ஆட்டம் மற்றும் அவரின் கேப்டன்சியை பலரும் விமர்சித்து வரும் நிலையில், அந்த வரிசையில் ஷேவாக்கும் சேர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “கடைசி ஓவர்களில் தோனி அடித்த 3 சிக்ஸர்கள், ஏதோ அவர் வெற்றிபெற முயல்கிறார் என்பதாக தோன்றியிருக்கலாம். ஆனால், அவர் வெற்றிக்காக ஆடவேயில்லை.

அவர் ஆடாமல்விட்ட ‘டாட்’ பந்துகளே அதற்கு சாட்சி. அவர், கேதார் ஜாதவுக்கு முன்பாக இறங்கியிருக்கலாம். மிடில் ஓவர்களில் ரன் ரேட் குறைந்துவிட்டது.

மேலும், ஸ்பின்னர்களை விளாசிய சாம்சனை, தோனி, வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து சந்தித்திருக்க வேண்டும். ஆனால், ஜடேஜா மற்றும் சாவ்லாவுக்கு தொடர்ந்து ஓவர்களை வழங்கினார் தோனி.

கடைசி ஓவர்களில் 20 – 22 ரன்கள் தேவைப்பட்டு, தோனி 3 சிக்ஸர்கள் அடித்திருந்தால் அதில் அர்த்தம் இருந்திருக்கும். இந்தப் போட்டியில், தோனியின் கேப்டன்சிக்கு நான் தரும் மதிப்பெண் 4/10 மட்டுமே” என்றுள்ளார் ஷேவாக்.