திருச்சி:
திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் திருச்சி பெரியகடைவீதி பகுதியில் நேற்று காலை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி பீட்டர் லியோனார்ட் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரவேல், ஏட்டு அழகர்சாமி மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுவினர் அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை போட்டனர்.

அப்போது அந்த காரில் ஏராளமான தங்க சங்கிலிகள் இருந்தன. அந்த நகைகள் திருச்சிஎன்.எஸ்.பி. சாலையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றிற்கு சொந்தமானவை. அவற்றிற்கு உரிய ஆவணங்களோ, ரசீதோ எதுவுமில்லை.இதனைத் தொடர்ந்து அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 5 கிலோ 961 கிராம் எடை கொண்டதாக இருந்த அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சத்து 10 ஆயிரத்து 342 ரூபாய் ஆகும்.

தங்க நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் அதனை உடனடியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கமலக்கண்ணன், தாசில்தார் குகன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் உடனடியாக அதனை பொட்டலமாக கட்டி சீல் வைத்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். திருச்சியில் சுமார் 6 கிலோ தங்க நகைகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.