சேகர் ரெட்டியின் டைரி: முட்டாளாக்கப்பட்ட மக்கள்: நடந்தது என்ன?

ர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டியை குறிவைத்து வருமானவரித்துறை சோதனை  செய்தது அனைவருக்கும் தெரிந்த விசயம்.

அந்த சோதனையின் போது கணக்கில் வராத பெரும் தொகை, ஆவணங்கள், தங்கம் என பலவும் கைப்பற்றப்பட்டன. அவற்றோடு டைரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.  அதில் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும் சில அமைச்சர்களுக்கு சேகர் ரெட்டி பணம் அளித்த விவரங்கள் குறிக்கப்பட்டிருந்தன.

இந்த டைரியை வருமானவரித்துறை சுமார் ஏழு மாதங்களுக்கு முன் தமிழக அரசிடம் அளித்தது… அதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில்.

ஆனால்  எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்த விசயம் குறித்து பிரபல ஆங்கில செய்தி சேனலான டைம்ஸ் நவ் ஆராயத் துவங்கியது. அப்போது அவர்களுக்கு டைரியின் சில பக்கங்கள் கிடைத்தன. அதில் ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலரது பெயருடன் வேறு பலர் பெயர்களும் இருந்தன.

இதையடுத்து, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்களிடம் அவர்களது தரப்பு கருத்தை அறிய முற்பட்டது டைம்ஸ் நவ். ஆனால் ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதையும் குறிப்பிட்டு அந்த டைரி விவரங்களை டைம்ஸ்நவ் வெளியிட்டது.

இந்த நிலையில்தான், ஊடகர்கள் சிலர் பெயர் கொண்ட பட்டியலை சமூகவலைதளத்தில்  பதிந்து, இதுவும் சேகர் ரெட்டி டைரிதான் என்று அதிமுக ஐ.டி. விங்கை சேர்ந்த பிரசாத் என்பவர் பதிந்தார். இது வைரலாகியது.

“ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள் சேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய பட்டியல் வெளியான விவகாரத்தை மறைக்கவே இப்படி போலி பட்டியல் வெளியிடப்பட்டது”  என்பதை எளிதில் உணர முடியும்.

சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்டு, தமிழக அரசிடம் வருமானவரித்துறையினரால் அளிக்கப்பட்ட (உண்மையான) டைரியை டைம்ஸ்நவ் தொலைக்காட்சி வெளியிட்டது அல்லவா. அதில் முக்கிய பங்காற்றியவர் அத்தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் சபீர் அகமது.

அவர் பெயருடன் சேர்த்து இன்னும் சில ஊடகவியலாளர்கள் பெயருடன்தான் போலி பட்டியலை அதிமுக ஐ.டி.விங் சமூகவலைதளத்தில் பரப்பியது.

அதிமுகவின் நோக்கம் நிறைவேறியது.

(வழக்கம்போல) அமைச்சர்கள் பெயர் உள்ள (உண்மையான) விவகாரத்தை விட்டுவிட்டு, ஊடகவியலாளர்கள் பெயர் உள்ள (போலியான) டைரி பக்கத்தைப் பிடித்துக்கொண்டார்கள், இணையள புத்திசாலிகள்

ஊடகர்கள் பெயர் உள்ள டைரி பக்கம் போலி என்பதை, அதை சமூகவலைதளத்தில் பரப்பிய அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிரசாத் என்பவரே டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிடம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இது அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

தவிர போலி டைரியை சமூகவலைதளங்களில் பரப்பபியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த சட்ட நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என போலி டைரியில் குறிப்பிடப்பட்டிருந்த டைம்ஸ் நவ் ஊடகவியலாளர் சபீர் அகமது, நமது பத்திரிகை டாட் காம் இதழிடமும் தெரிவித்திருந்தார்.

ஆனால் முன்னதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட… வருமானவரித்துறை கைப்பற்றி, தமிழக அரசிடம் அளித்த. டைரியில் குறிப்பிடப்பட்டிருந்த அமைச்சர் பெருமக்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். இது குறித்து, அறிக்கையோ, ட்விட்டர் பதிவோகூட அவர்கள் வெளியிடவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

எந்தவொரு விவகாரத்தையும் ஆழ்ந்து கவனித்து கருத்துக்களை வெளியிடும் அரசியல் பிரமுகர்கள் சிலரும்கூட, “சேகர்ரெட்டியின் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்” என்றார்கள். ஊடகவியலாளர்கள் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்த போலி டைரியை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

ஆனால், அந்தத் தலைவர்களின் தொண்டர்கள்கூட, போலி டைரியைத்தான் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள் என்பதுதான் ஆச்சரியம்.

ஆக, மக்களை.. குறிப்பாக, தங்களை அறிவாளிகளாக நினைத்துக்கொண்டு சமூகவலைதளங்களில் எழுதும் பல அப்பாவிகளை முட்டாளாக்கிவிட்டார்கள் அதிமுகவினர்.

வழக்கம்போல இந்த அப்பாவிகள் கேட்கும் புத்திசாலித்தனமான கேள்விகளுள் ஒன்று, “ஊடகவியலாளர்கள் எல்லோரும் நேர்மையாளர்களா” என்பது.

எந்தத்  துறையிலும் எல்லோரும் நேர்மையாளர்கள் என்று சொல்லிவிட முடியாது. இது அனைவரும் அறிந்த உண்மை.

குறிப்பிட்ட இந்த (போலி) டைரி விவகாரத்தில் உள்ளவை பொய் என்பதுதான் அறிய வேண்டிய கருத்து.

ஆனால் அதிமுக நினைத்தது போல.. சேகர் ரெட்டியின் உண்மையான டைரியில் இருந்த அமைச்சர்களை விட்டுவிட்டு, இணையதள புத்திசாலிகள், போலியான பட்டியலைப் பிடித்துத்தொங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்களை.. குறிப்பாக இணையதளத்தில் எழுதும் அப்பாவிகளை எளிதாக முட்டாளக்க முடியும் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.