சென்னை,

மிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வராக இருந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டுகளை மேற்கொண்டனர்.

இதில், தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன் ராவ், மணல் மாபியா சேகர் ஆகியோர்  குறிப்பிடத்தக்கவர்கள்.

சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் பக்கங்களில் தமிழக துணை முதல்வர் உள்பட பல அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமோ என அமைச்சர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 மற்றும் 9ந்தேதி பிரபல மணல் காண்டிராக்டரான சேகர் ரெட்டியில் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய  அதிரடி சோதனையின்போது, ஏராளமான பணம், தங்கக்குவியல் உள்பட சொத்து ஆவனங்கள், முக்கிய டைரிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சேகர ரெட்டி, அப்போதைய முதல்வராக இருந்த ஓபிஎஸ்-க்கும், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடிக்கும் நெருக்கமானவர் என கூறப்பட்டது.

அந்த நிலையில்,  சேகர் ரெட்டியின் ‘டைரி’. அந்த டைரியில் பல்வேறு பெரும் அரசியல் புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக அப்போதே தகவல் வெளியானது. அதன் பின்னர் அந்த டைரியில் உள்ள பெயர்களின்படி, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெறறது.

இந்நிலையில், இன்று டைம்ஸ் நவ் ஆங்கில தொலைக்காட்சியில், வருமான வரித்துறை கைப்பற்றிய சேகர் ரெட்டியின் டைரியின் பக்கங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அந்த நிறுவனம் ஒளிபரப்பிய பக்கத்தில், தற்போதைய   துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது.

இது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சேகர் ரெட்டியின் டைரி பக்கங்கள் வெளியாகி இருப்பது அதிமுகவில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.