ஜாமியா மிலியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தரை நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை

டில்லி

டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தரைப் பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

டில்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தராக நஜ்மா அக்தர் பணிபுரிந்து வருகிறார்.   கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று இரவு காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து நூலகத்தைச் சூறையாடி மாணவர்களை தாக்கியதாக புகார் எழுந்தது.  இது குறித்து நஜ்மா அடுத்த நாள் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வுக் குழுவுக்கு கடும் அதிருப்தியை அளித்தது. இந்தக் குழு கடந்த 2018 ஆம் வருடம் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று இவர் பெயரை ஜனாதிபதியிடம் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்குச் சிபாரிசு செய்தது.   அப்போது இவருக்கு புலனாய்வுத்துறை அனுமதி பெற்ற பிறகு பதவி அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.   கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி அன்று ஜனாதிபதி இவரைப் பல்கலை துணை வேந்தராகத்   தேர்வு செய்தார்.

இந்த தேர்வுக் குழுவில் ராமகிருஷ்ண ராமசாமி , டிபி சிங், மற்றும் எம் எஸ் சித்திக்கி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.   இதில் ராமசாமி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.   அந்த கடிதத்தில் அவர் நஜ்மா அக்தருடைய நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை எனவும் பல முறை அவர் விதி மிறல்கள் செய்துள்ளதால் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியின் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஏற்கனவே ஜனாதிபதி இரு பல்கலைக்கழக துணை வேந்தர்களைப் பதவி நீக்கம் செய்துள்ளதை சுட்டிக் காட்டி புலனாய்வுத் துறை இதுவரை நஜ்மாவின் நியமனத்துக்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  அத்துடன் உடனடியாக நஜ்மா அக்தரைத் துணை வேந்தர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ராமசாமி பதிலளிக்க விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.  நஜ்மாவும் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.   மேலும் ராமசாமி எழுதிய  கடிதத்தில் புலனாய்வுத் துறை இதுவரை நஜ்மாவின் நியமனத்துக்கு அனுமதி அளிக்காதது ஏன் என்பதற்கும் இவரது நியமனம் குறித்து ஏதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதா என்பதற்கும் எவ்வித விளக்கமும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.