செல்ஃபி விவகாரம்: மாணவனுக்கு சிவக்குமார் சார்பாக புதிய செல்போன்

செல்ஃபி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்த நடிகர் சிவகுமார், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு புதிய செல்போன் வழங்கியுள்ளார்.

கடந்த 28ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டார். அப்போது தன்னை செல்ஃபி எடுத்த ராகுல் என்கிற கல்லூரி மாணவரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டார். இக்காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியது. நெட்டிசன்கள் பலரும் சிவக்குமாரின் செயலை கண்டித்தனர்.

“செல்ஃபி எடுப்பது எனக்குப் பிடிக்காது. தவிர அனுமதி இன்றி செல்ஃபி எடுப்பது தவறு” என்று சிவக்குமார் விளக்கம் அளித்தார். அப்போதும் அவருக்கு தொடர்ந்து பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, “நான் செல்போனை தட்டிவிட்டது பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கவில்லை என்கிற பட்சத்தில் வருத்தம் தெரிவிக்கிறேன். ஐ யம் வெரி சாரி” என்று பேசி அதை வீடியோவாக வெளியிட்டார். அப்ப்போதும் அவருக்கு கண்டனங்கள் குவிந்துகொண்டே இருந்தன.

இந்த நிலையில்  மாணவர் ராகுலுக்கு சிவகுமார் சார்பில் இன்று புதிய செல்போன் வழங்கப்பட்டது. சமுக வலைத்தளவாசிகளுக்கு கல்லூரி மாணவர் ராகுல் நன்றி கூறியுள்ளார்.