`செல்ஃபி எடுத்தது செல்ஃபிஷ்” என்று பிரபல பாடகர் ஜேசுதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

1954-ம் ஆண்டிலிருந்து காலம் காலமாக குடியரசுத் தலைவர் தேசிய விருது வழங்குவதுதான் வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா டில்லியில் நடைபெற்றது. விழாவில் முக்கியமான 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் விருது வழங்குவார். மற்றவர்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விருது வழங்குவார்’ என அறிவிக்கப்பட்டது. அதாவது மாலை 4 மணிக்கு நடந்த விழாவில் ஸ்மிருதி இரானியும், 5:30 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் விருது வழங்கும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் விருது அறிவிக்கப்பட்ட 141 கலைஞர்களில் 66 பேர்,  ஸ்மிருதி இரானி கையால் விருதை வாங்க மறுத்து அரங்கைவிட்டு வெளியேறிவிட்டனர்.

விருது வழங்கும் நாள் குறித்து முடிவுசெய்ய, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் குடியரசுத் தலைவர் மாளிகையை அணுகும்போதே, `அன்றைய தினத்தில் 11 பேருக்குதான் விருது கொடுக்க முடியும்’ என்று குடியரசுத் தலைவரின் தனிச்செயலர் சஞ்சய் கோத்தாரி தெளிவாகக் கூறியிருக்கிறார். தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக அதிகாரிகள், ஒரு நாளுக்கு முன்னதாக ரிகர்சல் தினத்தில்தான் விருது பெறும் கலைஞர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் மீது குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள்  பிரதமர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தள்ளனர். இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் கையால் விருது பெற்றவர்களில் நடிகை ஜான்வி (ஸ்ரீதேவி சார்பில் விருது பெற்றார்), இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாடகர் ஜேசுதாஸ் ஆகியோர்  முக்கியமானவர்கள். விழாவில் பங்கேற்க  டில்லியில் அசோகா ஹோட்டலிலிருந்து புறப்பட்ட ஜேசுதாஸுடன் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்தார்.  உடனே ஜேசுதாஸ், அந்த இளைஞரிடமிருந்து செல்போனை   பிடுங்கினார்.  மேலும் ஆத்திரத்துடன், “செல்ஃபி எடுப்பது செல்ஃபிஷ்” என்றார். மேலும், `நீங்கள் எடுத்த படத்தை அழியுங்கள்” என்றார்.

இதனால்  செல்ஃபி எடுத்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார். மேலும்  இளைஞரிடமிருந்து செல்போனை பிடுங்கிய ஜேசுதாஸ், செல்ஃபி புகைப்படத்தை தானே அழித்துவிட்டுச் சென்றார்.

இதற்கிடையே, விருது வழங்கும் விழாவில் எழுந்த சர்ச்சை குறித்து ஜேசுதாஸிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். `இப்படியெல்லாம் இங்கே கேள்வி கேட்க வேண்டாம்’ என்று வாயில் விரலை வைத்து மூடி செய்கை காட்டினார் ஜேசுதாஸ். .

முன்னதாக, விழாவில் பங்கேற்கும் அனைத்து கலைஞர்களுக்கும் குடியரசுத் தலைவர் தன் கையால் விருது வழங்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகளிடம் 66 கலைஞர்களும் கையொப்பமிட்டு மனு அளித்திருந்தனர். மனுவில் ஜேசுதாஸும் கையொப்பமிட்டிருந்தார். சககலைஞர்கள் புறக்கணித்தபோதும், மலையாள இயக்குநர் ஜெயராஜ், ஜேசுதாஸ் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.