தமிழ்நாடு மாநில அமைச்சர் ஒருவர், யாரோ ஒரு அரைவேக்காட்டு அதிகாரி சொன்னார் என்று, வைகை அணை நீர் ஆவியாகிவிடாமல் இருக்க, தெர்மாகோல் அட்டைகளை செலோடேப் கொண்டு ஒட்டி தண்ணீரில் மிதக்கவிட்ட சம்பவம் மிகப்பெரிய டிரெண்டிங்காகி, கடுமையான கேலி-கிண்டல்களுக்கு ஆளானார் அந்த அமைச்சர்.

ஆண்டுகள் ஓடிவிட்டாலும்கூட, இன்றவும் ஆங்காங்கே விட்டகுறை மற்றும் தொட்டகுறையாய் அந்த அமைச்சரின் செயல் கடுமையான கேலி-கிண்டல்களுக்கு ஆளாகிக் கொண்டுதான் உள்ளது. வேறுசில தமிழக அமைச்சர்களின் பேச்சுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தெல்லாம் நாம் இங்கே அலசத் தேவையில்லை. மிகவும் அதிகமாக பாப்புலரான தெர்மாகோல் விஷயத்தை மட்டும் இங்கே எடுத்துக்கொள்வோம்.

தெர்மாகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு பெரிய கல்வி தகுதிகளெல்லாம் இல்லை. அவர் சிறந்த அறிவாளி மற்றும் திறமையானவர் என்றெல்லாம் அறியப்பட்டவரும் கிடையாது. அதிமுக என்ற கட்சியில் அமைச்சராவதற்கு என்ன தகுதியோ, அதைப் பயன்படுத்தி அமைச்சராகி, தனது பதவியை தொடர்ந்து தக்கவைத்து வருபவர். அவ்வளவுதான்!

சரி. இப்போதைக்கு இவரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்னவென்றுதானே கேட்கிறீர்கள்?

வேறொரு மத்திய அமைச்சர் குறித்து இந்த இடத்தில் பேச வேண்டியுள்ளது. அதனால்தான் செல்லூர் ராஜு நமது கவனத்திற்கு வந்தார்.

மெத்தப் படித்தவர், அறிவாளி, திறமையானவர் மற்றும் வெளிநாட்டில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்று விளம்பரப்படுத்தப்படுபவர் நிர்மலா சீதாராமன். கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்களை மீறி, தேர்தல்களில் போட்டியிடாமலேயே ராஜ்யசபா மூலமாக மேலேறி அமர்ந்தவர் என்ற குறிப்பிடப்படுபவர். தனிப்பொறுப்புடன் கூடிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை கேபினட் பொறுப்பு வகித்து, தற்போது நாட்டின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வாயிலிருந்து கடந்த காலங்கள் மற்றும் சமீபகாலங்களில் வெளிவந்துள்ள சில கருத்துகளை சற்றே நினைவில் ஓடவிடலாம்.

இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, இந்திய கடற்படையால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டபோது, “சுட்டது இந்திய கடற்படைதான். ஆனால், துப்பாக்கிக் குண்டு அவர்களுடையது அல்ல” என்றார்.

மோசமான ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஹோட்டல் உணவுகளின் விலைகள் எடக்குமடக்காக ஏறிய நிலையில், அதுகுறித்து இவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, “ஏன் ஹோட்டலில் சாப்பிடுகிறீர்கள்? வீட்டிலேயே சமைத்து உண்ண வேண்டியதுதானே?” என்றார்.

நிதியமைச்சராக இருக்கும் இவரிடம், ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி குறித்து கேட்கப்பட்டபோது, இவர் பேசிய இரண்டு கருத்துக்கள் முக்கியமானவை.

“உங்களிடம் இருக்கும் பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனங்களை வாங்கினால் ஆட்டோமொபைல் துறை சீரடையும்”.

“இன்றைய இளைஞர்கள் புதிய கார்களை வாங்கி இஎம்ஐ கட்ட விரும்பாமல், ஓலா மற்றும் உபேர் சேவைகளை அதிகம் பயன்படுத்துவதும் ஆட்டோமொபைல் துறையின் சரிவுக்கு முக்கிய காரணம்”.

அறிவானவர் மற்றும் திறமையானவர் என்று விளம்பரப்படுத்தப்படும், நாட்டின் நிதியமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பில் அமரவைக்கப்பட்டிருக்கும் ஒருவரின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகளைப் பாருங்கள்!

அமைச்சர் செல்லூர் ராஜுவின் செயல் ஜஸ்ட் ஒரு காமெடி. அதோடு அவர் தொடர்பான அத்தியாயம் ஓவர். நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் இடத்திலெல்லாம் அவர் இல்லை மற்றும் அதற்கடுத்து குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த சர்ச்சையிலும் அவர் சிக்கவுமில்லை.

ஆனால், நிர்மலா சீதாராமனோ, மிகப்பெரிய ஒரு பொறுப்பில் இருந்துகொண்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை உத்தரவாதங்களை தீர்மானிக்கும் நிலையில் இருந்துகொண்டு தொடர்ச்சியாக இப்படி அபத்தமான கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால், செல்லூர் ராஜு சிக்கியது போன்று இவர் சிக்குவதில்லை. இவரின் கருத்துகள் லேசான சர்ச்சைகள் மற்றும் சாதாரண சமூகவலைதள கிண்டல்களோடு கடந்து செல்லப்படுகின்றன.

இதில் என்னவொரு விசேஷமென்றால், நிர்மலா சீதாராமன் அதிமுகவின் அமைச்சர்களை விஞ்சுமளவிற்கு பேசினாலும்கூட, அவர் ஒரு அறிவாளி மற்றும் திறமையானவர் என்ற பிம்பம் அவரிடம் எப்போதும் தொடர்ச்சியாக ஒட்டிக்கொண்டுள்ளது. ஏன்?

இக்கேள்விக்கான விடை நமது சமூக அமைப்பு மற்றும் சமூக பொதுப்புத்தி என்பவற்றில் புதைந்துள்ளது என்றே நம்பலாம்!