சென்னை: வடகிழக்கு பருவமழை, நிவர் புயல் காரணமாக பெய்து வரும் தொடர்மழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளதால், அடையாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக, சென்னை நிலவரம், தற்போதைய  மீண்டும் 2015ம் ஆண்டு பயங்கரத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே இருந்து வருகிறது.

அடையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக, அடையாறு ஆற்றின் கரையோரம உள்ள குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் தண்ணீர்  குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.  மேலும் தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதிகளும் ஏற்கனவே மழை நீரால் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அடையாற்றில் கரைபுரண்டு ஓடும் நீர் காரணமாக மேலும் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி பொதுடக்கள் போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையுலும், மரங்கள் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ள சோகமும் அரங்கேறி உள்ளது.

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு  கரையை கடக்கத் தொடங்கும் நேரத்தில், மேலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. சென்னை, கோயம்பேடு, கொளத்தூர், வியாபார்சபாடி, பாரிமுனை தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்பட வடசென்னை பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், தென்சென்னையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  தென்சென்னையைச் சேர்ந்த  புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, ஹஸ்தினாபுரம், தாம்பரம், முடிச்சூர், நன்மங்கலம் போன்ற பகுதிகள் முற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளது.    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருவதால், பெரும்பாலான புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் மிதக்கின்றன.   கனமழையால் முட்டிக்கு மேல் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு உள்ளதால், ஆற்றில் ஓடும் தண்ணீர் காரணமாகவும் இந்த பகுதிகளில் மேலும் தண்ணீரில் அளவு அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஏராளமானோர் வீட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

‘முடிச்சூர் வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிப்பதால் மக்கள் பாதுகாப்பு இடங்களை நோக்கி செல்கிறார்கள். நாளை வரை கனமழை பெய்யும் என்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் மலைப்பகுதிகள் இருப்பதாலும் அங்கு அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த 2015ம் ஆண்டைய வெள்ளப்பாதிப்பை நினைவுப்படுத்துகின்றன.

இதற்கிடையில் பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக  பல இடங்களில் மரம் உடைந்து விழுந்துள்ளதால், மின்சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.    சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் மரம் ஒன்று சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் கீழே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் உள்ளனர். அதுபோல,  சென்னை திருவல்லிக்கேணி  டாக்டர் பெசண்ட் சாலையில் பலதத காற்று காரணமாக  மரம் விழுந்து விழுந்ததாகவும் அப்போது அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த 50 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவர் யார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தொடர் மழைகாரணமாக பென்சில் ஃபேக்டரி அருகே ரெயில்வே தண்டவாளம் திடீரென கீழே இறங்கியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பாதிப்பை சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 சென்னை தரமணி சாலையில் இடுப்பளவு தண்ணீர் சாலைகளில் தேங்கியுள்ளது. தமிழ்நாடு நீர்வளத்துறை அலுவலம் போகும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதி வழியாக மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  5கண் மதகு வழியாக அடையாறு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தண்ணீர் திறப்பால் அடையார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கரையோர குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் இடிந்த விழுந்ததால் தண்ணீர்  குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கு நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும்,  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பினையடுத்து சென்னையில் 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி புறநகர் பகுதியான   கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்னும் புயல் கரையை கடக்காத நிலையிலேயே சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.  இந்த நிலையில், இன்று இரவு புயல் கரையை கடக்கும் போது உருவாகும் பலத்த காற்று மழை காரணமாக, ஏற்படப்போகும் சேதங்களை நினைக்கும்போது, சென்னை மீண்டும் 2015 வெள்ளப்பாதிப்பை எதிர்கொள்ளுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.