விஜயின் சர்க்காருக்கு எனது ‘செங்கோல்’ பரிசு: வருண் ராஜேந்திரன்
சென்னை:
நடிகர் விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன் என்று செங்கோல் கதைசிரியர் வருண் ராஜேந்திரன கூறி உள்ளார்.
ஏர்ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் படத்தின் கதை, தனது கதை கதாசிரியர் வருண் ராஜேந்திரன் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக தென்னிந்திய கதாசிரியர் சங்கத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. கதாசிரியர் சங்கமும், சர்க்கார் கதை வருண் கதைதான் என்று கூறிய நிலையில், கதாசிரியர் வருண் ராஜேந்திரனிடம், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் சமரசம் பேசினர்.
இது தொடர்பான வழக்கின் விசரணை இன்று உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற நிலையில், சர்க்கார் படக்கதை விவகாரம் தொடர்பாக சமரசம் ஏற்பட்டுள்ளதாக முருகதாஸ் தரப்பிலும், சன் பிக்சர்ஸ் தரப்பிலும் கூறப்பட்டது. அதையடுத்து வழக்கின் விசாரணை முடித்து வைக்கப்பட்டது.
இதன் காரணமாக சர்க்கார் படம் தீபாவளி அன்று வெளியாவது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோல் கதையின் ஆசிரியர் வருண் ராஜேந்திரன், நான் சர்காருக்கு தடை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை. அங்கீகாரம் கேட்டுத்தான் கோர்ட்டுக்கு சென்றேன். எனக்கான அங்கீகாரம் படத்தில் எனக்கு கிடைத்தால் போதும் என்றுதான் கோர்ட்டுக்கு சென்றேன்.
2004ல் நான் விஜய்க்காக எழுதிய போராட்டம் இது. அவரை மனதில்வைத்துதான் இந்த கதையை எழுதினேன். அவருக்கான படம்தான் இது. என்னுடைய இந்த போராட்டத்திற்கு பின்னால் இருந்தது விஜய்தான். நடிகர் விஜயின் போராட்ட குணம்தான் என்னை போராட தூண்டியது. நான் விஜயை நேரில் சென்று சந்திப்பேன். விரைவில் அவரை சந்திப்பேன் என்று கூறினார்.
மேலும், விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ அவருக்கு பரிசாக அளிக்கிறேன் என்ற தருண், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.