கோபிசெட்டி பாளையம்

போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கும் அளவுக்கு ஊதியம் தர தமிழக அரசிடம் மனம் உள்ளதாகவும், ஆனால்  பணம் இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றிய பேச்சுவார்த்தையில் அரசு தங்கள்  கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளாததால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர்.  கடந்த நான்கு நாட்களாக தொடரும் இந்த வேலை நிறுத்தத்தினால் மாநிலம் எங்கும் மக்களுக்கு கடும் அவதி ஏற்பட்டுள்ளது.

நிகழ்வு ஒன்றுக்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபி செட்டிப் பாளையம் வந்துள்ளார்.   அவர் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.  அவரிடம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது  “போக்குவரத்துத் துறை ஊழியர்கள் கேட்கும் அளவுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு மனம் உள்ளது.   அதே நேரத்தில் அரசிடம் போதிய பணம் கிடையாது.    தற்போது அரசு கடும் நிதி பற்றாக்குறையில் தவிக்கிறது.    இந்த நிலைமையை உணர்ந்து போக்குவரத்து ஊழியர்கள்  அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும்”  என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.