பெங்களூரு

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகும் நேரம் வந்துள்ளதாகக் கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் வருடம் முதல் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து வந்தார்  சென்ற வருடம் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரை ராஜினாமா செய்ய வேண்டாம் என மூத்த தலைவர்கள்  கேட்டுக் கொண்ட போதிலும் அவர் அதை ஏற்கவில்லை.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜோதித்ராதித்ய சிந்தியா முதல்வராக விரும்பிய போதிலும் காங்கிரஸ் கட்சி அம்மாநில முதல்வராக கமல்நாத்தை நியமித்தது.  கட்சியின் மாநிலத் தலைமைப் பதவி தனக்குக் கிடைக்கும் என நம்பியதும் நிறைவேறாததால் அவர் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது.  அவர் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்தித்ததாகத் தகவல்கள் வந்தன.

நேற்று இந்த தகவல் வந்த சிறிது நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதித்ராதித்ய சிந்தியா ராஜினாமா செய்தார்.  அவருடன் 21 காங்கிரஸ்  சட்டப்பேரவை உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.  இதனால் கமல்நாத் அரசு கவிழலாம் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.   காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து சிந்தியாவை நீக்கினார்.

இந்நிலையில் கர்நாடக மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் தனது டிவிட்டரில்,

“மத்தியப் பிரதேசத்தில் என்ன நடந்திருந்தாலும் ஒன்று மட்டும் தெளிவாகி உள்ளது.  

தற்போது ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ஏற்கும் நேரம் வந்துள்ளது. 

அவரும் மற்ற மூத்த தலைவர்களும் மேல்மட்டத்தில் பல முக்கிய மாறுதல்களைச் செய்யும் நேரம் வந்துள்ளது.

இனியும் காங்கிரஸ் கட்சிக்கு அவர் வேண்டும் என்பதையும் அவருக்குக் காங்கிரஸ் கட்சி வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது:”

என பதிவிட்டுள்ளார்

தினேஷ் குண்டு ராவின் கருத்துக்குப் பல மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.