புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குருபதா நந்தா ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். 77 வயதான குருபதா நந்தா கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர் ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான குருபதா நந்தா 1972-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1980-ஆம் ஆண்டு ரூர்கேலா தொகுதியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேலும் குருபதா நந்தா 1978-ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் அணியின் தலைவராகவும், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினராகவும், கட்டாக் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

இது தவிர அவர் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார் மேலும் பல கலாச்சார சங்கங்களுடன் தொடர்புடையவராகவும் திகழ்ந்தார். அவருடைய மரணத்திற்கு முதல்வர் நவீன் பட்நாயக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் குருபதா நந்தாவின் மரணத்தால், ஒரு மூத்த மற்றும் திறமையான ஆட்சியாளரை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது என்று ஒடிசாவின் காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் குருபதா நந்தாவின் மரணத்திற்கு பல மூத்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்