மீண்டும் தலைவர் பதவி ஏற்க ராகுலுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை

டில்லி

நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின்  135 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை மீண்டும் தலைவர் பதவி ஏற்கக் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பு ஏற்று அக்கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். அதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.   ஆயினும் ராகுல் காந்தி பிடிவாதமாக ஜூலை இறுதியில் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.  அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் 135 ஆம் ஆண்டு தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.  அந்த விழாவில் கட்சியின் தலைமை பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்திக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இது குறித்து மூத்த தலைவர் திக் விஜய் சிங்  செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

திக்விஜய் சிங், “கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி இருக்கக் கூடாது.  தேர்தல் தோல்விக்குப் பொறுப்பு ஏற்று அவர் பிடிவாதமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.   தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு,  குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவற்றை ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வருகிறார்.  இந்நிலையில் அவர் மீண்டும் தலைமை பதவிக்கு வர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் தாரிக் அன்வர், “ராகுல் காந்தி தலைமை பதவியில் இருந்து விலக முடிவு செய்த போது மற்ற தலைவர்களும் செயற்குழு உறுப்பினர்களும் அவரை சமாதானம் செய்ய முயன்றும் அவர் ஏற்கவில்லை.  இப்போதும் அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் தலைவராகி கட்சியை வழி நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” எனக் கூறி உள்ளார்.