அயோத்தியில் ராமர் சிலை அருகே சீதை சிலையும் அமைக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்

லக்னோ:

யோத்தியில் அமைக்கப்பட உள்ள  ராமர் சிலையுடன் சீதையின் சிலையையும் நிர்மாணிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் , மாநில முதல்வர் யோகிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

குஜராத் மாநிலத்தில், உலகிலேயே உயரமான சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை திறக்கப் பட்டதை தொடர்ந்து பல மாநிலங்கள் தங்களுக்கு பிடித்தமான கடவுள்களின் சிலைகளை நிறுவ இருப்பதாக அறிவித்து உள்ளன.

உ.ப.யில் ராமர் சிலை, ஆந்திராவில் படேல் சிலையை விட உயரமான உயரமான கோபுரம்,  கர்நாடகாவில் காவிரி தாய் சிலை, குஜராத்தில் புத்தர் சிலை என அடுத்ததாக பிரம்மாண்டமான சிலைகள் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் அமைக்க இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ள  151 மீ உயரத்திலான  பிரம்மாண்டமான ராமர் சிலையுடன், அவரது மனைவியான சீதாதேவியின் சிலையையும் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஜம்மு காஷ்மீர் தலைவருமான கரன்சிங், உ.பி. முதல்வர் யோகிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதி உள்ள கடிதத்தில், ராமருக்கு 151 அடி உயரத்தில் மிகப்பெரிய சிலை அமைக்க முடிவெடுப்பதாக அறிந்தேன். அப்படி இருந்தால் ராமர் சிலையின் உயரத்தை பாதியாக குறைத்து அவருடன் சீதையின் சிலையையும் சேர்த்து நிர்மாணிக்க வேண்டும் என்றும்,  மிதிலையில் நடந்த திருமணத்துக்குப் பிறகே சீதை அயோத்திக்கு வந்தார். வந்த சில காலங்களிலேயே ராமருடன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றுவிட்டார். அங்கு ராவணனால் கடத்தப்பட்டார். ராமரால் மீட்கப்பட்டு மீண்டும் அயோத்திக்கு வந்தார். அக்னி பிரவேசம் செய்தார். அதனால் அயோத்தியில் ராமர் சிலைக்கு அருகில் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும். இது சீதைக்கு பெருமை சேர்க்கும் என்று  தெரிவித்துள்ளார்.