மூத்த பத்திரிகையாளரும், நூற்றுக்கணக்கான படைப்பாளிகளை உருவாக்கியவருமான எம்.பி. திருஞானம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடக நண்பர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பத்திரிகை.காம் இணைய இதழுக்கு கவுரவ செய்தி ஆலோசகராக பணியாற்றி வந்தார்.  பல்வேறு செய்திகளையும், கட்டுரைகளையும் எழுதி பத்திரிகை டாட் காமின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தார்.  அவரது ஆலோசனையின் பேரில் பத்திரிகை டாட் காம் இணையதளமும் வெற்றிநடை போட்டு வருகிறது.

வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  கொரோனா ஊரடங்கால்,  சரியானமுறையில் சிகிச்சை மேற்கொள்ள  முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி , இன்று அவரது உயிர் பிரிந்தது.
மூத்த பத்திரிகையாளரான எம்.பி.திருஞானம், ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து களப்பணியாற்றி வந்தார்.  காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே. சம்பத் இருந்தபோது, அவரது அரசியல் பணியால் கவரப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவராக வாழப்பாடியார் இருந்தபோது, அவருக்கு பக்கபலமாக திகழ்ந்தார். அவரது குடும்ப நண்பராகவும் திகழ்ந்து வந்தார். மேலும்  மூத்த காங்கிரஸ் தலைவர்களான எம்.பி. சுப்பிர மணியம், ஐஎன்டியுசி காளன் போன்றோரிடமும் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர்.
எழுத்துமீது தீராத காதல் கொண்ட திருஞானம், பின்னர் தராசு இதழில் இணைந்து,  தனது எழுத்துப்பணியை தொடங்கினார். தராசு ஆசிரியர் ஷ்யாமை குருவாக கொண்டு, அவரது ஊக்குவித்தல் மற்றும் ஆலோசனையின் பேரில் செய்திகளை கொடுத்து, தமிழக பத்திரிகை யாளர்களில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தார்.
அரசியல் முதல் சினிமா வரை அனைத்து தரப்பு செய்திகளையும் அக்கு வேறு, ஆணி வேறாக தருவதில் எம்.பி. திருஞானத்தை அடித்துக்கொள்ள இதுவரை யாரும் இல்லை.
கடந்த 2016ம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது, அவருக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தது குறித்து அவர் எழுதிய ஒரு செய்தி நாடு முழுவதும்  முழுவதும் பிரபலமானது…
முதல்வர் பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதில் என்ன அதிசயம் ? அவர் தனது செந்தத்திற்கு – சின்ன அம்மாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார். ஆச்சரியமா ?  என்று கேள்வி எழுப்பியவர், 

“ராஜீவ் காந்திக்கு முறைப் பெண் ஜெயலலிதா!” ஒரு க்ளுக்” ரிப்போர்ட்! – என்ற தலைப்பில்  அவர் எழுதி (1989ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியிட்ட )   ‘தராசு’ வார இதழில் வெளியான கட்டுரையை நினைவு கூர்ந்தார்.
வயது முதிர்வு காரணமாக நோயால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எம்.பி.திருஞானம் இன்று சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளம் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது.