தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதிகள் கடிதம் : நீதித்துறையில் அடுத்த பரபரப்பு

டில்லி

னைத்து நீதிபதிகளையும் அழைத்து உச்சநீதிமன்றத்தின் எதிர்கால திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதிகள் இருவர் கடிதம் எழுதி உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரர் தலைமையில் நான்கு நீதிபதிகள் உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர்.   அப்போது தலைமை நீதிபதி மீது அவர்கள் குற்றம் சுமத்தினர்.  அதன் பிறகு நடந்த சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின் இந்த சர்ச்சை அடங்கிப் போனது.

தலைமை நீதிபதி மீது புகார்கள் தெரிவித்த 7 எதிர்க்கட்சிகள் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது மற்றொரு பரபரப்பை உண்டாக்கியது.  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி நீக்கம் செய்யும் அளவுக்கு அவை வலுவான குற்றம் இல்லை எனக் கூறி அந்த கோரிக்கையை நிராகரித்தார்.   அதை அடுத்து தற்போது நீதித்துறையில் மற்றொரு பரபரப்பு உண்டாகி உள்ளது.

மூத்த நீதிபதிகளான கோகாய் மற்றும் லோகுர் ஆகிய இருவரும் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.  அந்தக் கடிதத்தில் நீதிமன்ற பிரச்னைகள் குறித்தும் உச்சநீதிமன்ற எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவாதிக்க ’முழு நீதிமன்றத்தையும்’ அழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

‘முழு நீதிமன்றம்’ என்றால் அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் அழைத்து விவாதிப்பது எனப் பொருள் ஆகும்.    மிகவும் முக்கியமான மற்றும் அவசரமான நீதித்துறை விவகாரங்களில் மட்டுமே இவ்வாறு அழைப்பது வழக்கம் ஆகும்.  தற்போது முழு நீதிமன்றத்தையும் அழைக்க வேண்டும் என நீதிபதிகள் கோரிக்கை விடுத்தது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இந்த கடிதம் குறித்து தலைமை நீதிபதி அலுவலகம் எந்த ஒரு பதிலோ விளக்கமோ அளிக்கவில்லை.

இதற்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்திய 4 நீதிபதிகளும் நீதித்துறையில் அனைத்து நீதிபதிகளையும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்க வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.