ஏற்கனவே ஓடும் ரெயில்கள் சரியாக இல்லாத போது புல்லட் ரெயில் எதற்கு : மூத்த பாஜக பெண் தலைவர்
சண்டிகர்
பஞ்சாப் மாநில முன்னாள் பெண் அமைச்சர் லட்சுமி காந்த சாவ்லா ரெயில்வே நிர்வாகத்தை கடுமையாக குறை கூறி உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் நகரை சேர்ந்த மூத்த பெண் பாஜக தலைவர் லட்சுமி காந்த சாவ்லா. இவர் முந்தைய பஞ்சாப் மாநில பாஜக அரசில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வகித்தவர் ஆவார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று அமிர்த்சரில் இருந்து அயோத்தி வரை ரெயிலில் சென்றுள்ளார். சரயு – யமுனா விரைவு ரெயில் என பெயரிடப்பட்ட ரெயிலில் அவர் பயணம் செய்துள்ளார்.
அந்த பயணத்தின் போது அவருக்கு நிகழ்ந்த அனுபவங்களால் ரெயிலில் பயணம் செய்வோருக்கு அந்த நாள் நல்ல நாளாக அமைவதில்லை என கருத்து கூறி உள்ளார். தனது அனுபவங்கள் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு அவர் ரெயில்வே நிர்வாகத்தை கடுமையாக தாக்கி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பிரதமர் மோடி மற்றும் ரெயில் வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரையும் தாக்கி உள்ளார்.
அவர் தனது வீடியோவில் தெரிவித்துள்ளதாவது :
”நான் வந்த ரெயில் மிகவும் தாமதாமாக சென்றது. அது அயோத்தியை அடைய 9 மணி நேரம் தாமதம் ஆனது. அத்துடன் அதன் இறுதி நிலையமான பீகார் ஜெய்நகரை அடைய 14 மணி நேரம் ஆகி உள்ளது. இந்த தாமதம் குறித்து கேட்டதற்கு யாரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதன் பிறகு ஏதோ சில காரணங்களுக்காக இந்த ரெயில் தடம் மாற்றப்பட்டதால் மூன்று மணி நேரம் தாமதம் ஆகி அது அதிகரித்து 14 மணி நேரம் தாமதமானதாக அறிந்தேன்.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசிய போதும் எந்த ஒரு சரியான பதிலும் கிடைக்கவில்லை. நான் ரெயில்வே அமைச்சருக்கு அனுப்பிய ஈ மெயிலுக்கும் பதில் இல்லை. இதனால் ரெயில்வேயில் நடப்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாததால் பயணிகள் சரியான தகவல் இன்றி தவிப்பதை நான் அனுபவ பூர்வமாக தெரிந்துக் கொண்டேன்.
அது மட்டுமின்றி ரெயில்வே ஊழியர்கள் பதிவு செய்யாத இரு பயணிகளுக்கு இருக்கைகளை விற்பனை செய்வதையும் நான் கண்டு பிடித்தேன். எனது கோச்சில் இருந்த டி டி ஈ வேறு சில ஊழியர்களுடன் சேர்ந்து பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு இருக்கை அளித்து அதற்காக நிறைய பணம் பெற்றார். அதை கண்ட நான் ரெயில்வே அதிகாரிகளுக்கு நான் இறங்கியதும் உடனடியாக புகார் அளித்துள்ளேன்.
இந்த ரெயில் செல்லும் வழியில் ஏறும் ஏராளமான பயணிகளுக்கு தங்க சரியான இடமும் இல்லை. இந்த குளிரில் அவர்கள் தாமதான ரெயிலுக்காக மணிக்கணக்கில் நடைமேடையில் படுத்துள்ளனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் தாங்கள் பயணிகளுக்கு அனைத்து உதவைகளும் செய்வதாக தகவல்கள் வெளியிடுகின்றன.
நான் பிரதமர் மோடி மற்றும் ரெயில்வே அமைச்சர் இருவரும் தங்கள் அடையாளத்தை காட்டிக் கொள்ளாமல் ரெயில் பயணம் செய்ய வேண்டும் என யோசனை கூறுகிறேன். அப்போதுதான் அவர்களுக்கு பயணிகளின் துயரம் புரியும். ஏற்கனவே செல்லும் ரெயில்களை சீராக்கி விட்டு பாஜக அரசு புல்லட் ரெயில் விடுவதைப் பற்றியோ பணக்கார ரெயிலான சதாப்தி மற்றும் ராஜதானி ரெயில்களின் முன்னேற்றத்தை பற்றியோ சிந்திக்க வேண்டும்” என கூறி உள்ளார்.