சீனாவின் ரேபிட் கருவிகளை திருப்பி அனுப்புங்கள்: மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அதிரடி உத்தரவு

டெல்லி: கொரோனா பரிசோதனைக்காக இரு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது.

சீனாவிடம் இருந்து வாங்கிய கொரோனா விரைவு பரிசோதனைக் கருவியை பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டு, அதனை துரிதமாக கண்டறிய சீனாவின் 2 நிறுவனங்களிடம் இருந்து பரிசோதனை கருவிகளை இந்தியா கொள்முதல் செய்தது.

ஆனால் இந்த கருவிகள் சரியாக செயல்படவில்லை, துல்லியத் தன்மை இல்லை என்று ராஜஸ்தான் மாநில தரப்பில் இருந்து ஐசிஎம்ஆருக்கு புகார்கள் பறந்தன.

இதையடுத்து கருவிகளின் தரம் பற்றி அறிய மூன்று மாநிலங்களுடன் ஐசிஎம்ஆர் ஆலோசனை நடத்தியது.  முடிவில் அடுத்த 2 நாட்களுக்கு விரைவு பரிசோதனை கருவிகளை சோதனைக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசிடம் கடந்த 22ம் தேதி அறிவுறுத்தியது.

 

இந்நிலையில் சீனாவிடம் இருந்து வாங்கிய பரிசோதனை கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக இரு சீன நிறுவனங்களான, Guangzhou wondfo biotech, zhuhai livzon வாங்கிய ரேபிட் கருவிகளை திருப்பியளிக்க மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனைக்கு பிசிஆர் சோதனைக் கருவிகளே உகந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.