செந்தில் பாலாஜி –இன்- ராஜேந்திரன்-அவுட்: தி.மு.க.வில் தொடரும் அ.தி.மு.க. ஆதிக்கம்..

‘’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு ‘’ என்று  தி.மு.க. நிறுவனர் அறிஞர் அண்ணா எப்போதோ சொல்லி வைத்ததை இன்றைக்கும் அட்சர சுத்தமாக –ஒரு கொள்கையாகவே கடை பிடித்து வருகிறது அந்த கட்சி.

தமிழகத்தில் தி.மு.க.-அ.தி.மு.க இரு கட்சிளும் பிரதான கட்சிகள்.இந்த பிராந்திய கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் தலைமையுடனான முரணால் ,மாற்று முகாம்களுக்கு ஜாகை மாறுவது வழக்கம்.

அ.தி.மு.க.வை ஆரம்பித்து எம்.ஜி.ஆர்.ஜெயித்த பிறகு இந்த இடப்பெயர்ச்சி மிகுதியாகவே இருந்தது.வந்தவர்களுக்கு எல்லாம் உயர்ந்த நாற்காலிகளை கொடுத்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர்.

தன்னை தி.மு.க.வில் இருந்து வெளியேற்ற  வழிமொழிந்த நெடுஞ்செழியனையே, அமைச்சரவை யில் தனக்கு அடுத்த இடத்தில் வைத்து அழகு பார்த்த பரந்த மனத்துக்கு சொந்தக்காரர் அவர்.

பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இந்த கூடு விட்டு கூடு பாயும் கூத்துகள் அரங்கேறின. ஆனால் அவர்களை எட்டவே வைத்திருந்தார் ஜெயலலிதா.

சென்னையின் பரிதி இளம் வழுதியாக இருந்தாலும் சரி…சேலத்து  அர்ஜுனனாக இருந்தாலும் சரி ஒரே அளவு கோல் தான்.அதிகம் போனால் எம்.எல்.ஏ.சீட்.

ஆனால் தி.மு.க.வில் தலை கீழ்.

அ.தி.மு.க.வில் இருந்து வருபவர்களுக்கு சொடக்கு போடுவதற்குள் மாவட்ட செயலாளர் பதவி கிடைத்து விடும். ஆட்சி அமையும் பட்சத்தில் அமைச்சர் பதவிக்கும் உத்தரவாதம் உண்டு.

சாத்தூர் ராமச்சந்திரன் , எ.வ.வேலு ஆகியோர்  அ.தி.மு.கவில் இருந்து வந்து இரு பதவிகளிலும் அமர்ந்த உதாரண புருஷர்கள்:.

கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதா கிருஷ்ணன்,முத்துசாமி ,சேகர்பாபு உள்ளிட்டோர் உள்ளூர் தி.மு.க.புள்ளிகளை ஓரம் கட்டி விட்டு மாவட்ட செயலாளர் பதவியை பிடித்த அ.தி.மு.க.மாஜிக்களில் குறிப்பிடத்தகுந்தோர்.

ஜெகத்ரட்சகன் .செல்வகணபதி, ஆஸ்டின்,போன்றோர் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி தி.மு.க,வில் உயரம் தொட்ட  வி.ஐ.பி.க்கள்.

லேட்டஸ்டாக  இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறார்- செந்தில் பாலாஜி.

அவரது ஜாதகத்தை கொஞ்சம் புரட்டி பார்க்கலாம்.

ஆரம்ப காலத்தில் தி.மு.க.வில் இருந்தவர்.1990 களில் தி.மு.க. இளைஞர் அணியில் இருந்த செந்தில் பாலாஜி  வைகோ ம.தி.மு.க.வை தொடங்கியபோது அவருடன் சென்றார்.

ம.தி.மு.க.வில் நிறைய இழந்து சோகமானவர் அங்கிருந்து அ.தி.மு.க.வுக்கு வந்தார்.2006 ஆம் ஆண்டு கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட செந்தில்பாலாஜிக்கு வாய்ப்பு கொடுத்தார் ஜெ.அமோகமாய் ஜெயித்தார் செந்தில்.

மீண்டும் அதே தொகுதியில் இருந்து 2011 ஆம் ஆண்டு போட்டியிட்டு வென்று பேரவைக்குள் மீண்டும் நுழைந்தார்.

பின்னர் கரூர் மாவட்ட செயலாளர்,போக்குவரத்து அமைச்சர் என அவரை உயர்த்தி அழகு பார்த்தார் ஜெயலலிதா.2015 ஆம் ஆண்டில் செந்திலுக்கு இறங்கு முகம் ஆரம்பித்தது.

அமைச்சர் பதவில் இருந்து நீக்கப்பட்டார்.மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஜெ.மறைவுக்கு பிறகு டி.டி,வி. தினகரன் அணியில் சேர்ந்தார்.தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரு மாதத்துக்கு முன்னால் தி.மு.க.வில் சேர்ந்த செந்தில் பாலாஜி நேற்றைக்கு கரூர் மாவட்ட  தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஏற்கனவே தி.மு.க. செயலாளராக இருந்த நன்னியூர் ராஜேந்திரன் தி.மு.க.நெசவாளர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொங்கு மண்டலத்தில் தி.மு.க. வீக்காக உள்ளதால் ,அங்கு கட்சிக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் செந்தில் பாலாஜிக்கு இந்த உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அண்ணா அறிவாலய  வட்டார தகவல்.

சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி செந்தில்பாலாஜிக்கு வழங்கப்படும், என்பதும், தி.மு.க ஜெயித்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதும் கூடுதல் தகவல்.

–பாரதி.

கார்ட்டூன் கேலரி