மும்பை: ஒரேநேரத்தில் வெவ்வேறு தொடர்களில் ஆடும் வகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட இந்திய அணிகளை தயார் செய்யும் திட்டம் தயாராகி வருவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா காரணமாக, ஐபிஎல் உள்ளிட்ட பல கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், பிசிசிஐ அமைப்பிற்கு நிறைய பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இந்த இழப்புகளை ஈடுகட்டும் விதமாக குறுகிய காலங்களில் அதிகப் போட்டிகளை நடத்த வேண்டிய சூழல் ஏற்படுமென்றும், அதன்பொருட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளை தவிர்க்க வ‍ேண்டிய, ஒவ்வொரு வகை கிரிக்கெட்டிற்கும் தனித்தனி அணிகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதன்படி, விராத் கோலி தலைமையில் டெஸ்ட் அணியும், ரோகித் ஷர்மா தலைமையில் ஒருநாள் அணியும், கே எல் ராகுல் தலைமையில் டி-20 அணியும் அமைக்கப்படும் என்று ஊகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி-20 அணியில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்புகள் தரப்படும் என்று கூறப்படுகிறது. ரோகித் ஷர்மா டெஸ்ட் அணியில் இடம்பெற்றால், ஒருநாள் அணிக்கும் ராகுலே கேப்டனாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால், இவைதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கப்பெற்றால் மட்டுமே எதுவும் உறுதியாகும்.