நீதிபதிகளுக்கு சுங்கச் சாவடியில் தனி வழி : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சுங்கச் சாவடிகளில்  தடை இன்றி செல்லும் வகையில் நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன.  இங்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ஒரே வரிசையில் செல்ல வேண்டி உள்ளது.  நீதிபதிகள்  செல்லும் வாகனங்களில் அதற்கான அடையாளங்கள் உள்ளன.   ஆயினும் அவர்களுக்கு சுங்கச்சாவடிகளில் முன்னுரிமை அளிப்பதில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சுங்கச்சாவடிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து நடந்து வரும் வழக்கில் மேலே குறிப்பிட்ட விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது நீதிமன்ற அமர்வு, “தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழி கிடையாது.  இதனால் தேவையில்லாமல் அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க நேரிடுகிறது.

இதற்கான அடையாள அட்டைகளை காட்டினாலும் சுங்கச்சாவடி  பணியாளர்கள் மதிப்பதில்லை.  இதனால் நீதிபதி உள்ளிட்ட பிரமுகர்களுக்கு தனி வழி அமைக்கப்பட வேண்டும்.  நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக இதற்கு ஆவன செய்ய வேண்டும்.

இது குறித்து நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” என உத்தரவிட்டுள்ளது