தனிகட்சி தொடங்குவேன்! கமல்ஹாசன் அதிரடி பேட்டி

--

சென்னை,

மிழகத்தில் ஊழலை ஒழிக்க விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என்று நடிகர் கமலஹாசன் கூறி உள்ளார்.

மத்திய மாநிலஅரசு குறித்து பல்வேறு கருத்துக்களை தனது டுவிட்டர் பதிவில் கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நடிகர் கமலஹாசன் நாட்டில் புரையோடியுள்ள ஊழலை ஒழிக்க தனிக்கட்சி தொடங்குவேன் என்று தெரிவித்து  உள்ளார்.

ஏற்கனவே தான் அரசியலில் இருப்பதாக கூறியிருந்த கமல் தற்போது தனிக்கட்சி தொடங்குவேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் கமலஹாசன் தனது அரசியல் பிரவேசம் உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து பதிலளித்துள்ளார்.

அதில், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வகையான சித்தாந்தம் இருக்கிறது. அதன் அந்த கட்சிகளுடன் எனது எண்ணம் சிந்தனைகள் பொருந்தவில்லை, ஒத்துப்போகவும் இல்லை.  எனக்கும் அரசியல் பற்றிய எண்ணங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் அரசியலில் மாற்றம் வேண்டும்,  புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதற்கான  மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அந்த மாற்றத்தை கொண்டு வர சிறிது தாமதம் ஆகலாம் என்றார்.

தமிழகத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில், நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை உருவாகி வருகிறது என்றும், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தனிக்கட்சியே தொடங்கி முன்னெடுத்து செல்வேன் என்று கூறியுள்ளார்.

இந்த எனது எண்ணம் என் வாழ்நாளில் நிறைவேற்றாவிட்டாலும், எனது காலத்துக்க பின் வருபவர்கள் அதை வழி நடத்தி செல்லும் வகையில் இருக்கும் என்றும் கூறி உள்ளார்.

இந்தியாவில் தற்போது  அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டது என்று குற்றம் சாட்டிய கமல், நாடு முழுவதும் அரசியலில்  மாற்றம் வரவேண்டும் என்றும்,  நாடு முழுவதும்   ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

அதே நேரத்தில் தேர்தலில் வாக்களித்து, தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் சிறப்பாக செயல் படாவிட்டால் 5 வருடங்கள் காத்து இருந்து, அதன் பிறகு மீண்டும்  ஓட்டுப் போட்டு மாற்றும் நிலை இருக்க கூடாது, மக்களுக்கு  கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் உடனே அவர்களை மாற்றும் நிலை வரவேண்டும் என்றும், இந்த  புதிய மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதற்கு என்ன காரணமா என்றால், முதலில் நமது வீடு சுத்தமாக இருந்தால்தான், அடுத்த வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல முடியும். இதுதான் எனது எண்ணம், இதற்கான  சரியான நேரம் வரும்போது, அதற்கான மாற்றத்தை தொடங்குவேன், அதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கி விட்டது.

ஊழல் இருக்கும் இடத்தில் இருக்க மாட்டேன்..அதேபோல  நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது என்றும் கூறி உள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் உடனான சந்திப்பு குறித்து கூறும்போது, நான் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசியுள்ளேன். அப்போது படமும் எடுத்துக்கொள்கிறேன். ஆனால், தற்போது நிலவி வரும் அரசியல் பரபரப்பான சூழ்நிலையில், நான் கேரளா முதல்வரை சந்தித்தது, கமலஹாசன் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப்போவதாக செய்திகள் பரவி விட்டன, தனக்கு அப்படி ஒரு எண்ணம் கிடையாது.

 

 

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

You may have missed