தமிழக பள்ளிக்கல்வித்துறை டிவி சேனல் பொங்கல் முதல் ஒளிபரப்பு: செங்கோட்டையன்

--

சென்னை

மிழக பள்ளிக் கல்வித்துறைக்குக்கு என  தனி டிவி சேனல் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த டிவி சேனல் வரும் பொங்கலன்று தனது ஒளிபரப்பை தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவ மாணவிகள் தேசிய தேர்வு களை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டு வருகிறது. அதுபோல நீட் பயிற்சி, ஆடிட்டர் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் திறமையான ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக சீருடை மாற்றம், ஆங்கில வழிக்கல்வி என பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு கல்வித்துறையை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்.

இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு என தனி டிவி சேனல் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக  பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன்,  மாநில கல்வியியல்  ஆராய்ச்சி மற்றும்  பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி,  ஒருங்கிணைந்த கல்வி  திட்ட இயக்குனர்  சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும்,   தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு  காட்சிகளை பதிவு  செய்யவும், தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

கேமரா, தொழில்நுட்பகருவிகள் வாங்கும் பணிகளும் தொடங்கி இருப்பதாகவும், காட்சி பதிவுக்காக, ‘ட்ரோன்’ என்ற ஆளில்லா  விமானம் வாங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல படப்படிப்பு  நடைபெறும் வகையில்  சென்னை, அண்ணா நுாலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் (தை 1ந்தேதி) பொங்கல் தினத்தன்று பள்ளிக்கல்வித்துறை சேனல் தனது ஒளிபரப்பை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் ஜனவரியில்  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.