பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள்: எடப்பாடி பழனிசாமி

சென்னை:

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் வீசிய புயல் காரணமாக அதிமுக இரண்டாக உடைந்தது. ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் எடப்பாடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் ஓராண்டு சாதனையை கொண்டாடும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் சாதனை விழா  கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மாநில அமைச்சர்கள் , எம்.பி.க்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், எடப்பாடி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில்  28 அரங்குகளைக் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர், அதிமுகவில் இருந்து, ஏதோ ஒரு மாயை காரணமாக  பிரிந்து சென்றவர்கள் திரும்பி வருவார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து ஆற்றி வருவதாகவும்,  ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டில் ரூ.17,619 கோடி மதிப்பில், 38,338 பணிகளை தொடங்கி வைத்துள்ளதாகவும், ரூ.14,473 கோடி மதிப்பிலான 7,408 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம் என்றும் கூறினார்.

கடந்த  ஓராண்டில் 5,746 கோப்புகளில் கையெழுத்திட்டு, உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள நான்,  சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் என்றும்,  கடுமையாக உழைத்து படிப்படியாக உயர்ந்து முதல்வர் என்ற நிலையை இன்று  அடைந்துள்ளேன் என்றும் கூறினார்.

விளம்பரம், ஆடம்பரமின்றி பல திட்டங்களை செய்து முடித்துள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர், இது தேர்தலை நோக்கமாக கொண்டு செயல்படும் அரசு அல்ல; மக்களின் தேவைகளை நோக்கமாகக் கொண்டு திட்டம் வகுக்கும் அரசு என்று கூறினார்.

எது உண்மை முகம்; எது அரிதாரம் பூசி நடிக்கும் போலி முகம் என்பது மக்களுக்கு தெரியும் என்ற எடப்பாடி, , அதிமுகவில் இருந்து, ஏதோ ஒரு மாயை காரணமாக  பிரிந்து சென்றவர்கள் திரும்பி வருவார்கள் எனத் தெரிவித்தார்.

எங்களை குறைசொல்லி, விளம்பரம் தேடுபவர்களை அதே விளம்பரம் அழித்துவிடும் என்றும்  பல சோதனைகளை சந்தித்து, அதை வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றி 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம் என்று கூறினார்.

அரசுக்கு   உறுதுணையாக நின்ற துணை முதல்வர், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி  பேசினார்.

விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதிது புதிதாக பலர் அரசியலுக்கு வருவதாக கூறி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது அரசியல் பிரவேசத்தை விமர்சித்தார்.

விழாவில், தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் ஒன்றரை மணி நேர செய்திப்படம் திரையிடப்பட்டது.

தமிழக அரசின் சாதனையை விளக்கும் கண்காட்சி ஒரு வார காலத்திற்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி