சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், பொதுமக்களின் கேள்விகளுக்கு தரப்படும் பதிலில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு துறைவாரியாக தனி அதிகாரியை நியமிக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார் மாநில தகவல் ஆணையர் பிரதாப் குமார்.

அவர் கூறியதாவது, “தகவல் அறியும் உரிமை சட்டத்தில், பொதுமக்கள் கேட்கும் தகவல்கள் கிடைக்காத பட்சத்தில், மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் முறையிடலாம். அங்கும் பதில் கிடைக்கவில்லையெனில், சென்னையில் உள்ள தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு மனுக்களின் விசாரணைக்காக பொதுமக்கள் சென்னைக்கு வரும் சிரமத்தை குறைக்க, மாவட்டந்தோறும் நாங்களே நேரடியாக சென்று விசாரணை நடத்தி தீர்வுகண்டு வருகிறோம்.

தகவல் உரிமைச் சட்டம் துவக்கப்பட்ட 2005ம் ஆண்டு முதல் இதுவரை 30 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் இச்சட்டம் குறித்து பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு உள்ளது.

தமிழகத்தில் திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில், அதிகமானோர் இச்சட்டத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் பிற மாவட்டங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லை.

தமிழகத்தில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகள் தொடர்பாக, மனுக்கள் அதிகம் வருகின்றன. அரசு துறைகளில் பிற பணிகளை கவனிக்கும் அதிகாரிகளே, தகவல் உரிமை சட்டத்திற்கு பதில் தர வேண்டியிருப்பதால், பொதுமக்களின் மனுக்களுக்கு பதில் தர காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த தாமதத்தைத் தவிர்க்க, துறைவாரியாக தகவல் தரும் அதிகாரியை தனியாக நியமிக்க, அகில இந்திய தகவல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தனி அதிகாரி நியமிக்கப்பட்டால் காலதாமதம் தவிர்க்கப்படும். அரசு துறைகளில் பொதுமக்கள் விண்ணப்பித்த மனுக்கள் மீது 30 நாட்களில் தகவல் உரிமை சட்டத்தில் பதில் தரப்பட வேண்டும்” என்றார்.