‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

காஞ்சிபுரம் தமிழகத்துக்கு தந்த  தங்க தமிழன் பேரறிஞர் கா.ந. அண்ணாதுரை. மும்மொழி வித்தகரான பேரறிஞர் அண்ணா தமிழ். ஆங்கில, இந்தி என மும்மொழியிலும் முத்தாய்ப்பாக பேசுவதிலும், எழுதுவதிலும் சிறந்து விளங்கியவர்.  முற்போக்கு சீர்திருத்த வாதியான அண்ணா பல முற்போக்கு சீர்திருத்த நாடகங்களையும் எழுதியும், இயக்கியும் அதில் ஒரு பாத்திரமாக நடித்தும் பெருமை சேர்த்தவர். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதியதன் மூலம் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியும் வந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் 15, 1909 ஆம் ஆண்டு நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பமான திரு. நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் மகனாப் பிறந்தார். இவரின் தந்தை ஒருநெசவாளர். தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளர்ந்து வந்தார்.

இவர் தனது மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்துகொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமக்கையின் பேரக் குழந்தைகளை த்ததெடுத்து வளர்த்தனர்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வந்த அண்ணாதுரை குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராகச் சில காலம் பணிபுரிந்தார். கல்வி: 1934 இல் இளங்கலாமானி மேதகைமை (ஆனர்ஸ்) மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியில் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.

ஆசிரியர் பணி:

பட்டப் படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆறுமாத காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். பிறகு பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.

பத்திரிக்கையாளர் பணி

பின்னர் ஆசிரியர் பணியை நிறுத்திவிட்டு பத்திரிகை ஆசிரியராக பணியாற்றினார். 1937ம் ஆண்டு முதல் 1940 வரை தந்தை பெரியார் அவர்களின் இதழ்களான குடியரசு, விடுதலை, பகுத்தறிவு போன்ற பத்திரிக்கைகளில் துணை ஆசிரியராகப் பணி புரிந்தார்.

அந்த காலகட்டங்களில் க்லகத்தா காய்ச்சல், ரிப்பன் மண்பத்து மகான்கள், ஓமன் கடற்கரையிலே போன்ற சிறப்புமிக்க கட்டுரைகளை எழுதினார். அப்போது நக்கீரன், பரதன், வீரர் எனும் புனைப் பெயர்களில் பல கட்டுரைகளையும் எழுதினார்.

அரசியலில் நுழைவு:

பின்னர் பெரியார்மீது கொண்ட அன்பினால் அரசியலில் ஈடுபடத்தொடங்கினார். நீதிக்கட்சியில் 1935 இல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பொறுப் பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் தொடங்கி னார்.(திராவிட நாடு தனி கோரிக்கையை வலியுறுத்தி துவங்கப்பட்டது) 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.

திமுக உருவாக்கமம்:

பெரியாரின் தனித்திராவிட நாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளைவரான மணியம்மையாரை பெரியார் மணம் செய்துகொண்டதால், அண்ணாவுக்கும், பெரியாருக்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த சமயத்தில்,  பெரியாரின் அண்ணன் மகனும் பெரியாரின் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக் கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு திமுக தொடங்கப்பட்டது.

17.10.1949 அன்று அண்ணா தொடங்கிய கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தாரக மந்திரமாக போற்றப்பட்டது.

அப்போதைய காங்கிரஸ் கட்சிக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். 1965ம் ஆண்டு நடைபெற்ற  இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக  திராவிட முன்னேற்றக் கட்சிக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு கூடியது.

பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான பண்பாடுகளே இவை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை தனி்ப்பட்டு ஒர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்கள் என்று கூறிய அண்ணா, அரசியலில் மற்ற கட்சியினருடன் மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல் எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்னை பொது வாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு இது என்று வலியுறுத்தி வந்தார்.

காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 27, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை முதல் தளபதியாகப் பொறுப்பேற்று நான்கு மாதம் சிறை தண்டனைப் பெற்றார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடராசன் – தாளமுத்து இருவரின் உயிரிழப்பிற்குப் பிறகு இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரண்டது.

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து கூறிய அண்ணாதுரை
இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது. அது பெரும்பாண்மை மக்களால் பேசப்படுவதால், ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே அல்லது ஏன் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே?

தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும் வரை எனக்கு உண்மையான திருப்தியே கிடையாது என்று இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்தார்.

தமிழக சட்டப்பேரவையில் அண்ணாதுரை

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தார். அப்போது அவரது கண்ணியத்துடனான பேச்சு அனைத்து கட்சியினரையும், சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே  அமைந்திருந்தன.

மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர். நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார்.

அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.

1957 இல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டப்பேரவை தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது. அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டப்பேரவைக்குள் நுழைந்தது.

1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரஸை அடுத்து உருவெடுத்திருந்துது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியை தழுவினார். பின்பு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு அண்ணாதுரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

1967 இல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார்.

தனது ஆட்சி காலத்தில் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். “இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு” நடத்தி தமிழுக்கு மேலும் பெருமை சேர்ந்தார்.

1962 இல் சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சியனரே வியக்கும் விதமாக மிக சாதுர்யமாக பதில் அளித்தார். பேரவையில் அண்ணா துரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அண்ணாதுரை அவர்கள் நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

அண்ணாவின் அசாத்திய மொழிப்புலமை

‘”கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு” என்ற அண்ணாவின் முழக்கம் புகழ் பெற்ற ஒன்று. “எதையும் தாங்கும், இதயம் வேண்டும், மறப்போம் மன்னிப்போம், கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு”, இதுபோன்ற பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும், பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.

ஒருமுறை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிசோதிப்பதற்காக அவரிடம், “ஏனென்றால்” என்ற வார்த்தையை மூன்று முறை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? என்ற கேட்டனர். அதற்கு அண்ணாதுரை அவர்கள், “No Sentence can begin with because, because, because is a conjunction” அதாவது எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தையை ஏனென்றால், ஏனென்றால், ஏனென்றால் என்பது ஓர் இணைப்புச் சொல் என்றார்.

தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், அனைவரையும் கவரும் வகையில் பேசும் திறன் பெற்ற அண்ணா, பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி உள்ளார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி, அதில், தனது திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பினார். அண்ணா எழுதிய வேலைக்காரி மற்றும் ஒர் இரவு போன்ற நாவல்கள் திரைப்படங்களாக வும் எடுக்கப்பட்டன.

அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்றுநோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பிப்ரவரி, 1969 இல் மரணமடைந்தார்.  அவர் பொடி போடும்  பழக்கம் உடையவர் இதனால் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி, மரணமடைந்ததாக கூறப்பட்டது.

அவரின் இறுதி மரியாதையில் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

தனது இறுதி அஞ்சலியில் திரண்ட பிரமாண்ட மக்கள் கூட்டத்தால், வாழும்போதும் சரித்திர நாயனாக வாழ்ந்து, இறப்பிலும் ஒரு உலக சாதனையை படைத்தார். அண்ணாவின் இறுதி நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

அவரின் நினைவை போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில்அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவகம் அமைக்கப்பட்டு உள்ளது.