லண்டன்: அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 11வது முறையாக விம்பிள்டன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளார். அவருக்கு வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வயதில் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடும் உலகின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் செரினா. இந்த இறுதிப்போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றினால், 24 முறை தனிநபர் பட்டம் வென்ற மார்க்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார்.

அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் பார்போரோ ஸ்ட்ரைகோவாவை வீழ்த்தினார். இந்த ஸ்ட்ரைகோவா 33 வயதில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற சாதனையாளர்! இவர் பிரிட்டனின் ஜொகன்னா ஹோன்டாவை காலிறுதியில் வீழ்த்தியிருந்தார்.

இறுதிப்போட்டியில், ருமானியா நாட்டைச் சேர்ந்த சைமோனா ஹேலப்பை சந்திக்கவுள்ளார். செரினா வில்லியம்ஸ் இதற்கு முன்னர் மொத்தம் 7 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது போட்டியாளர்களை மிக எளிதாக வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.