Random image

அம்பையரை திருடன் என திட்டிய செரீனாவிற்கு ரூ.12 லட்சம் அபராதம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியின் போது அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக செரீனா வில்லியம்ஸூக்கு ரூ.12லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Serena

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி சுற்றில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஜப்பானை சேர்ந்த நயோமி ஒசாகாவை எதிர்கொண்டார். இதில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக செரீனா 2-6,4-6 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

செரீனாவை வீழ்த்தி ஜப்பானின் நயோமி ஒசாகா முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்தார். இந்நிலையில், போட்டியின் போது விதிமுறைகளை மீறியதால் செரீனாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. விளையாட்டின் இடையே பயிற்சியாளாரிடம் ஆலோசனை பெற்றது, டென்னிஸ் ராக்கெட்டை சேதப்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக செரீனாவிற்கு அபராத புள்ளிகள் வழங்கப்பட்டது. மேலும், அம்பயர் கார்லோஸ் ராமோஸ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை செரீனா திருடன் என திட்டினார். இதற்காகவும், அவருக்கு அபராத புள்ளிகள் அளித்து அவை ஜப்பான் வீராங்கனைக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் செரீனாவிற்கு ரூ.12லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் ரூ.2,88,860 வெளியில் இருந்து பயிற்சி பெற்றதுக்காகவும், ரூ. 2,16,645 ஆத்திரத்தில் டென்னிஸ் ராக்கெட்டை வீசியதற்காகவும். ரூ. 7,22,150 சேர் அம்பயரை திருடன் என்று கூறி, வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்காகவும் என மொத்தமாக ரூ. 12,27,655 அபராதம் விதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பெண்களுக்கான டென்னிஸ் கூட்டமைப்பான டபிள்யு.டி.ஏ. செரினாவுக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்துள்ளது. ஆண்கள் வெளிப்படுத்துவதைப் போல பெண்களும் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது பாரபட்சம் பார்க்ககூடாது என டபிள்யு.டி.ஏ. அறிக்கையில் தெரிவித்துள்ளது.