பெங்களூரு

ல பெண்களை பலாத்காரம் செய்து கொன்றதாக தண்டனைகள் பெற்றுள்ள சயனைடு மோகனுக்கு ஒரு வழக்கில் இருந்து உயர்நீதிமன்றம் விடுதலை அளித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு பேருந்து நிலைய கழிவறகளில் கடந்த 2003 முதல் 2009 வரை பல இளம்பெண்களின் சடலங்கள் கிடைத்தன.    இவற்றில் மைசூரில் உள்ள லஷ்கர் மொகல்லா பஸ் நிலைய கழிப்பறையில் 8 சடலங்களும், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா பஸ் நிலைய கழிப்பறையில் 5 பேரின் சடலங்களும் இருந்தன.   சுமார் 20 பெண்களின் சடலங்கள் இது போல் கண்டெடுக்கப்பட்டன.   அனைவரும் 20 வயதிலிருந்து 30 வயது வரை உள்ள இளம் பெண்களே.

இந்த சடலங்களின் பிரேத பரிசோதனையில் இவர்கள் சயனைடை உட்கொண்டதால் மரணம் அடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அதனால் அவர்கள் அனைவரும் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்னும் கோணத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது.  கடந்த 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் 16ஆம் தேதி பண்டவால் பகுதியில் உள்ள அனிதா என்னும் பெண் கொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கு விசாரனையில் அவரது செல்ஃபோன் மூலம் மோகன் (வயது 52) என்னும் நபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

இந்த விசாரணை பற்றி போலீசார், “மோகன் மொத்தம் 32 பெண்களை பலாத்காரம் செய்து கொலையும் செய்துள்ளார்.   ஒவ்வொரு பெண்ணிடமும் ஒவ்வொரு பெயரைசி சொல்லி செல்ஃபோன் மூலம் பேசி உள்ளார்.   இவரது பேச்சில் மயங்கிய பெண்களை ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.   தன்னைத் திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தும் பெண்களிடம் கருத்தடை மாத்திரை என்னும் பெயரில் சயனைடு தடவிய மாத்திரைகளைக் கொடுத்து கழிப்பறைக்குள் சென்று அதை சாப்பிட்டு வருமாறு கூறி உள்ளார்.  இவர் பேச்சை நம்பிய பெண்கள் கழிவறையிலேயே மரணம் அடைந்துள்ளனர்.   இதனால் வழக்கில் அவரை சயனைடு மோகன் என அழைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து நாங்கள் நடத்திய விசாரணையில் அவருடைய 20 கொலைகளுக்கு மட்டுமே ஆதாரங்கள் கிடைத்தன.   எனவே இந்த 20 கொலைகளையும் தனித்தனி வழக்காக பதிவு செய்தோம்.  இதில் 3 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  அந்தத் தீர்ப்பில் மோகனுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது” எனக் கூறி உள்ளனர்.

தனக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று வழக்குகளின் தீர்ப்பை எதிர்த்து கர்நாகடா உயர்நீதிமன்றத்தில் சயனைடு மோகன் அப்பீல் செய்தார்.  இதில் ஒரு வழக்கான லீலாவதியின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.   இந்த வழக்கில் 2005ஆம் ஆண்டு லீலாவதி என்ற பெண்ணுடன் தனியார் விடுதியில் உல்லாசம் அனுபவித்துவிட்டு நகைகளை கொள்ளை அடித்து சயனைடு தடவிய கருத்தடை மாத்திரை கொடுத்ததாக மோகன் மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   இந்த அப்பீல் வழக்கில் மோகன் தானே வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் லீலாவதி வழக்கில் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனக் கூறி மோகனை விடுதலை செய்துள்ளது.   ஆயினும் மற்ற வழக்குகளில் அவர் தண்டனை பெற்றுள்ளதால் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  அதை தொடர்ந்து மோகன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.