பெங்களூரு :

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 13 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ கொலைகாரன் சங்கர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

இன்று அதிகாலை 2.15 மணியளவில் சிறைத்துறையினர் வழக்கமான சோதனைக்காக சிறைக்குள் ரவுண்ட்ஸ் வந்தனர். அப்போது சங்கர், தான் அடைக்கப்பட்ட அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.  அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. பிறகு  விக்டோரியா மருத்துவமனைக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடந்த இரு நாட்களுக்கு  முன்னர் சிறையில் இருந்து  தப்பிக்க சங்கர் முயற்சித்துள்ளார். ஆனால் அவர் காவல்துறையிடம் சிக்கியதால் மீண்டும் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக சங்கர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தனது அறையில் இருந்த ஷேவிங் பிளேடை பயன்படுத்தி சங்கர் தனது கழுத்தை அறுத்து மரணடைந்திருக்கிறார்.

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் உயர் பாதுகாப்பு கொண்ட பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்  சங்கர். தனது சிறைக்கதவிற்கு போலி சாவி தயாரித்து, போர்வையை கயிறாக பயன்படுத்தி அப்போது சிறையில் இருந்து தப்பித்தார்.

இந்த சம்பவத்தால் 11 காவலர்கள்  பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு பிறகு பரப்பன அக்ரஹாரா அருகில் உள்ள ஏரிப் பகுதியில் காவல்துறையினரிடம்  மீண்டும் சிக்கினார்.