பகுதி 2: ஏழை பிராமணர்கள் ஏராளம்    – த.நா.கோபாலன்

ரு நாள் காலை என் இல்லத்திற்கு வந்திருந்த நெருங்கிய உறவினர் ஒருவர், சற்று படபடப்பாகவே, “டி என் ஜி உங்களுக்குத் தெரியுமா? தமிழ்நாட்டில் பிராமணர்களே இல்லாத நிலையே உருவாகப்போகிறது…..”

”என்ன திடீர் அதிர்ச்சி தகவல்?”

”நான் டெய்லி வாக் போகிறேனல்லவா…4, 5 கிலோ மீட்டர் நடக்கிறேன்…எதிர்ப்படு வோர் அனைவரையும் கூர்ந்து கவனிப்பேன்..நீங்க நம்பமாட்டீங்க…இந்த ஒரு வாரமா ஒரு பிராமணன், ஒரு பிராமணன் கண்ணில் படவில்லையே… என் தெருவில் நான் ஒருவன் மட்டுமே பிராமணன்…எங்க கிராமத்துல அக்கிர ஹாரமெல்லாம் காலியாகிவிட்டது…யார் யாரோ வந்துவிட்டார்கள்…என்ன இது அக்கிரமம்…பிராமணர்களுக்கு  இங்கு வாழவே உரிமை இல்லையா, அருகதை இல்லையா…எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்…”

நான் அவரை ஒரு கட்டத்தில் நிறுத்தி, “கொஞ்சம் நில்லுங்க…ஆசுவாசப்படுத்திக்குங்க…ஒங்க வாக்ல யாரும் கண்ல படல…இன்று பிராமணர்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள்…ஒங்க தெருவுல யாரும் இல்லேங்கிறீங்க…சரி தமிழ்நாட்டு பாபுலேஷன்ல எத்தனை பர்சென்டேஜ் பிராமின்ஸ், உங்களுக்குத் தெரியுமா?

“……”

”2.5–3 பர்சென்ட் தான்…அவ்வளவு மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பவர்கள் பார்க்கு மிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பார்களா என்ன?”

அதன் பிறகு எங்கள் பேச்சு சென்ற திசையை இப்போதைக்கு விட்டுவிடுவோம். நான் சொல்ல வருவது பொதுவாக படித்த நடுத்தரவர்க்க பிராமணர்கள் பலர் மத்தியில் ஏதோ மறைமுகமாக இனச் சுத்திகரிப்பு, இன அழித்தொழிப்பு நடைபெறுவது போல பிரமை இருக்கிறது.

Fake News போலத்தான். ஒரே மாதிரியான சிந்தனையுடையவர்கள் தங்களுக்குள் ஆதாரமில்லாத செய்திகளைப் பரிமாறிக்கொள்ள, அது அவர்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றிவிடுகிறது. எது சரி, எது புருடா என்பதையெல்லாம் பகுத்துப் பார்க்கும் மனநிலை அவர்களிடமிருப்பதில்லை.

இது பொதுவான நிலை. விதிவிலக்குகள் நிறையவே உண்டு. அது வேறு. வேட்டையாடப்படும். அநீதி இழைக்கப்படும் சமூகம் தாங்கள் என்பதுதான் பொதுக் கருத்து.

சரி யதார்த்தம்தான் என்ன? மக்கட் தொகை கணக்கெடுப்பில் தலித்துக்கள் மற்றும் பழங்குடியினர் தவிர மற்றவர்கள் சாதி ரீதியாக அடையாளப்படுத்தப்படுவதில்லை.

2011ஆம் ஆண்டில் சாதி விவரங்கள் திரட்டப்பட்டன. ஆனால் அவை வெளியிடப்படவில்லை.

கடைசியாக சாதி வாரி விவரங்கள் திரட்டப்பட்டது 1931ஆம் ஆண்டில்தான். அப்போதைய மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி, சென்னை ராஜதானியின் இன்றைய தமிழக எல்லைகளுக்குள் வாழ்ந்த பிராமணர்கள் 2.5 சதம். அவர்களில் 75 சதமானோர் தமிழைத் தாய் மொழியாய்க் கொண்டிருந்தவர்கள் எஞ்சியவர் கன்னடம், தெலுங்கு, மராட்டிய மொழிக்காரர்கள்.

அந்த அடிப்படையில் இன்று நம் மாநிலத்து பிராமணர்களின் எண்ணிக்கை 17.80 இலட்சம் என்றும், அவர்களில் தமிழ் பேசுவோர் 14 இலட்சம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இதர மாநிலங்களில் மற்றும் வெளி நாடுகளில் வாழ்வோரையும் சேர்த்து மொத்தம் தமிழ் பேசும் பிராமணர்கள் சுமார் 18.5 இலட்சம் எனவும் கூறுகின்றனர் வல்லுநர்கள்.

மாநிலத்தின் மொத்த மக்கட் தொகை ஏறத்தாழ எட்டு கோடி., எனவே பிராமணர்கள் 2.1/2.2 சதம் என்றாகிறது. (இதெல்லாம் ஒரு குத்துமதிப்பாகத்தான்.) அதாவது விடுதலைக்கு முன்னான அவர்கள் விகிதாச்சாரம் ஏறத்தாழ அப்படியேதான் இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லும் அளவு மாற்றங்கள் இல்லை.

மக்கட் தொகை குறித்தே தோராயமாகத்தான் சொல்லமுடியும் எனில், பொருளாதார நிலை குறித்து கேட்கவே வேண்டாம் அதிகாரபூர்வ தகவல்கள் ஏதுமில்லை.

Anecdotal evidence என்பார்கள். செவி வழிச் செய்தி, அப்புறம் நாம் நேரடியாகப் பார்த்தறிந்தவை, இப்படியாக சில முடிவுகளுக்கு வருவது.  அத்தகைய கணிப்புக்கள் முழுமையாக நம்பக்கத்தக்க தில்லைதான். ஆனால் விவாதிக்க ஏதேனும் ஓர் அடிப்படை தேவைப்படுகிறதே. அந்த அளவில் நானும் என் புரிதலின்படி இங்கே சிலவற்றைச் சொல்லுகிறேன்.

முதலில் பிராமணர்களில் ஏழைகள் இருக்கின்றனரா இல்லையா? குருக்கள், சமையல் வேலை யில் இருப்போர், கீழ் மட்ட ஊழியர்களாக, ஒண்டுக் குடித்தனத்தில், வசதிகள் மிகக் குறைவாக, இவ்வாறு பலர் வாழத்தான் செய்கின்றனர்.

ஏழை பிராமணர்கள் ஏப்படியோ சற்று கௌரவமாக வாழ்ந்துவிடமுடிகிறது எனப் பலர் தவறாக நினைக்கின்றனர். கடும் வறுமையில் வாடும் பிராமணரகளை நாம் காணமுடியும்.

நான் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி வந்து, சென்னையில் அடைக்கலம் புகுந்தபோது, ஈமச் சடங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், சவுண்டி பிராமணன் என்றழைக்கப்படும் ரகத்தைச் சேர்ந்த, ஒரு உறவினர் குடிசையில், மயிலை பகுதியில் தங்கியிருந்தேன்.  அவர் என் அத்தை மகன். ஏதோ குடும்பச் சிக்கலில் தனியாகச் சென்று அவர்கள் குடும்பம் அவதிப்பட, பிழைப்பதற்காக சவுண்டி பிராமணனானவர் அவர்.

எனது குடும்பம் ஒன்றும் மிட்டா மிராசு இல்லை. பெருங்காயம் வைத்த பாண்டம்தான். ஆனாலும் எனக்கும் அந்த குடிசைச் சூழல் பயங்கரமாக இருந்தது. தாங்கவில்லை.

அத்தை மகனுக்கு சுமையாகி, அவருக்குக் கிடைப்பதையும் பங்கு போட்டுக்கொண்டிருந்தேன்

சாவு வீட்டுக்குப் போய் விட்டு தயிர்சாதம் கட்டிக்கொண்டு வருவார். அதற்காக நாக்கைத் தொங்கப் போட்டு காத்திருப்பேன். காலைக் கடன் கழிப்பது, குளிப்பது எல்லாம் மரணாவஸ்தை.

இன்னொருவர் சிபாரிசில் திருமண சமையல் கோஷ்டியில் சேர்ந்துவிட முயற்சி செய்தேன். என்னை அவர்கள் விரட்டிய விரட்டு, அவர்கள் வாழ்நிலை, நிச்சயமற்ற சூழல், எனக்கு சரிப்படவில்லை.

மரியாதையாக வீடு திரும்பினேன். அடித்தட்டு பிராமணர்களின் அவலநிலையினை நேரடியாக அனுபவித்ததால் அதெல்லாம் வெறும் கட்டுக்கதை அல்ல அப்படி அல்லலுறும் பலர் இருக்கின்றனர் என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.

வழக்கறிஞர் சுமதி கல்மண்டபம் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். நம் நெஞ்சை உருக்கும் ஒரு புதினம் அது. அதில் இந்த ஈமச் சடங்கு பிராமணர்களின் அவலங்கள் பற்றி சித்தரித்திருப்பார்.

அசோகமித்திரன் அவரது சிறுகதைகளிலும், நாவல்களிலும் பிராமணர்கள் மத்தியில் நிலவும் ஏழ்மையினை மிகையின்றி எழுதியிருப்பார்.

(தொடரும்..)