தொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா?

த.நா.கோபாலன்

த.நா.கோபாலன்

பகுதி-1

மிழகத்தில் பிராமணர்கள் இன்று பலரின் ஏளனத்துக்கு உள்ளாகலாம். கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டின் காரணமாய் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு வாய்ப்புக்கள் அருகியிருக்கலாம். அரசுப் பணிகளிலிருந்து ஏறத்தாழ முற்றிலுமாகவே அவர்கள் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

எழுத்தாளர் அசோகமித்திரன் நாங்கள் யூதர்களாகி விட்டோம், அழிக்கப்படுகிறோம், ஒடுக்கப்படுகிறோம் கேட்பாரில்லை என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.

ஒரு காலத்தில் சமூக அடுக்கின் உச்சியில் வீற்றி ருந்தவர்கள் இவ்வாறு தலைகுப்புற வீழ்ந்தும், அவர்களைப் பற்றி பல தரப்பினர் ஏன் இன்னமும் பேசவேண்டும்? அவர்களை வசைபாடுவதை ஒரு தொழிலாகவே கைக்கொண்டுவிட்ட ஒரு சிலர் தங்கள் சுய லாபத்திற்காக இத்தகைய விவாதங்களை செயற்கையாக உருவாக்குகின்றனரா? இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பிராமணர்களுக்கு என்ன வித பங்கிருக்கிறது? இத் தொடர் இது போன்ற வினாக்களுக்களுக்கு விடைகாண முயலும்.

நான் பார்ப்பனர்கள் என்று அச் சமூகத்தை விளிப்பதாயில்லை. பிராமணர்கள் என்றுதான் சொல்லப்போகிறேன். மேடையில் பேசும்போது பார்ப்பனர்கள் என்று சொல்லி, பலரது புருவங்களை உயரச்செய்து, ஏதோ பெரும் சாதனை ஆற்றிவிட்டதாக நான் நினைத்த காலமும் உண்டு, ஆனால் அது தவறு என இப்போது நினைக்கிறேன்.

திருச்சி ஈ வே ரா அரசுக் கல்லுரியில் படித்த நாட்களில் நாள்தோறும் ரயில் பயணம். உடன் மாணவர்கள், ஆசிரியர்கள். சூடான விவாதங்கள். நான் சாதீயத்தைக் கடுமையாக விமர்சிப்பேன். பலருக்கு என் வாதங்கள் எரிச்சலேற்படுத்தும். அதற்காகவே இன்னும் காட்டமாகப் பேசுவேன்.

அசோகமித்ரன்

நீ பார்ப்பானென அடையாளப் படுத்திக்கொள்ளத்தானே செய்கிறாய்? பூணூல் அணிந்திருக்கிறாயா இல்லையா, என்று கேட்பார்கள். “தவறுதான் எனக்கு ஏற்புடைய தல்லதான்…ஆனால் என் பெற்றோர் மனம் கோணக்கூடாது, முகம் சுளிக்கக்கூடாது…அவர்கள் என்னை சந்தியாவந்தனம் செய்யச் சொல்லி வற்புறுத்துவதில்லை…நாத்திகனாகிவிட்டதும் தெரியும், கம்யூனிசத்தில் ஈடுபாடு வந்திருப்பதும் தெரியும்…அது பற்றி பெரிதுபடுத்தமாட்டார்கள் ஆனால் பூணூலையும் நான் கழற்றிவிட்டால் மிகுந்த வேதனைப்படுவார்கள்…” என்றெல்லாம் விளக்கம் சொல்வேன்.

ஒரு கட்டத்தில் வார்த்தை தடிக்க, நீ வேடதாரி, hypocrite,  என ஒருவர் கூற எனக்கு கடுங்கோபம். புகை வண்டி யிலேயே என் சட்டையையும், பனியனையும் கழற்றி, பிறகு அணிந்திருந்த பூணூலையும் அகற்றி, “ இது முப்புரி நூல்…சில ஆயிரம் செலவழித்து, அய்யரை வரவழைத்து ஊரையெல்லாம் கூட்டி அணி விக்கப்பட்டது. பூணூல் அணியும்போது நான் இரண்டாவது முறையாகப் பிறக்கிறேன் என ஐதீகம்…அவ்வளவு புனிதமானது இது…” என விளக்கிவிட்டு, அதைக் கீழே வீசி எறிந்து, காலில் போட்டு நர நரவென்று தேய்த்தேன், ஒரு முறைக்கு இரு முறை.

உண்மையிலேயே மிரண்டுபோனார்கள் என்னுடன் பயணித்தவர்கள். “சரி, சரி இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டுவிடுவோம்,” எனச் சொல்லி அவர்களே பூணூலை எடுத்து, தூசியை ஊதி, என்னிடம் கொடுத்து மீண்டும் போட்டுக்கொள்ளச் சொன்னார்கள். அப்புறம் அது போன்று என்னைக் குற்றம் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள். நான் ஏதோ சாதித்துவிட்டதாக எனக்குள் ஒரு பெருமிதம்.

இதே போன்று இன்னொரு கட்டத்தில் நான் பூணூலை வீசி எறிந்து மிதித்தபோது, உடன் என் சித்தப்பா ஒருவரும் இருந்தார். அவர் ரொம்பவும் ஆசாரம். என்னை ஒன்றும் சொல்லமுடியாமல் ஆனால் மனம் நொந்து, விறுவிறு வென்று நகர்ந்து விட்டார். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டில்தான் நான் தங்கியிருந்தேன். அவர் மிக மனமுடைந்து காணப்பட்டார். அவரை சமாதானப்படுத்தும் வண்ணம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.. அன்றைய சம்பவத்தில் அவருக்கு பங்கே இல்லை. வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தார். இருந்தும் நான் ஏன் அவர் மனம் புண்படும்படி  நடந்துகொண்டேன்? எல்லாம் அந்த இளமை திமிர்தான்.

அது போலவே பார்ப்பனன் என்ற சொல்லையும் பொது மேடைகளில் பயன்படுத்தித்தான் வந்தேன். அச் சொல்லுக்கு ஆயிரம் விளக்கங்கள் சொல்லுகின்றனர். கிராமப்புறங்களில் அந்தப் பார்ப்பான் இருக்கானே என இயல்பாக பலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

காலங் காலமாக அதுவே அவர்களை விளிக்கும் சொல்லாயிற்று. ஆயினும் அது ஒரு வசைச் சொல்லே. எதற்காக எவரையும் ஒரு விவாதத்தில் தனிப்பட்ட முறையில் வசைபாடவேண்டும்? விமர்சனம் செய்வதையும் நாகரிகமாக செய்யமுடியுமே. விவாத நாகரிகம் மிக அவசியம் என்றுமே.

பிராமணர்கள் வாழ இயலாத, பிழைக்கவியலாத, ஒரு மாநிலமாகிவிட்டதா, தமிழகம்?

அசோகமித்திரன் புலம்பியது போன்று எல்லாமே இருண்டுவிட்டதா அவர்களுக்கு?

அல்லது சமூக நீதி நிலை நாட்டப்படுவது, சூத்திரர்களாக ஒதுக்கப்பட்டிருந்தோர் விஸ்வரூபம் எடுத்து தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொண்டதை இவர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லையா?

(தொடரும்)

6 thoughts on “தொடர்: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

Leave a Reply

Your email address will not be published.