காஷ்மீரில் தொடர் துப்பாக்கிச் சண்டை….ஒரு ராணுவ வீரர், 3 பயங்கரவாதிகள் பலி

--

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் தூரு சாகாபாத் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். வீரர்களின் எச்சரிக்கையை மீறி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு இருதரப்புக்கும் இடையே சண்டை தொடங்கியது.

இதில் 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். ராணுவத்தின் பதிலடியில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். மேலும் ஒருவன் தப்பி ஓடினான்.

இதேபோல் புட்காம் மாவட்டம் பான்சான் என்கிற கிராமத்தில் மசூதி ஒன்றுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை ராணுவவீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 2 பேர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகரில் நூர்பாக் என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 24 வயது வாலிபர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தார். இதை தொடர்ந்து வதந்தியை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகரில் செல்போன், இன்டர்நெட் சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.