டில்லி

னிப்போருக்கிடையே சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அதார் புனேவாலா மற்றும் பாரத் பயோடெக் இயக்குநர் கிருஷ்ணா எலா ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்

மத்திய அரசு சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு அனுமதி அளித்தது. இதில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா இணைந்து கோவிஷீல்ட் தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இதைத் தவிர பிஃபிஸர், மாடர்னா உள்ளிட்ட நிறுவன தடுப்பூசிகளுக்கும் அவசர அனுமதி கோரப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அதார் புனேவாலா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ஆஸ்டிரா ஜெனிகா,. பிஃபிஸர் மற்றும் மாடர்னா ஆகிய மூன்று நிறுவன தடுப்பூசிகளின் திறன் மட்டுமே நிரூபிக்கப் பட்டுள்ளதாகவும் மற்ற தடுப்பூசிகள் வெறும் தண்ணீர் எனவும் கூறினார்.  அவர் பெயரை குறிப்பிடாவிட்டாலும் பாரத் பயோடெக் நிறுவனத்தைக் குறை கூறுவதாகப் பலரும் புரிந்து கொண்டனர்.

இதையொட்டி பாரத் பயோடெக் இயக்குநர் கிருஷ்ணா எலா ஒரு பேட்டியில் தங்கள் தடுப்பூசிக்கு 200% அளவுக்கு நியாயமான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தர்.  மேலும் தங்கள் தடுப்பூசி தண்ணீரைப் போல் சுத்தமானதும் பக்கவிளைவுகள் அற்றதும் மற்றும் திறன் உள்ளது என்பதும் சோதனைகளில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித் தார்.

இவ்வாறு இரு நிறுவனங்களுக்கு இடையில் பனிப்போர் நிலவி வருகையில் இன்று இரு நிறுவனங்களும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.  அந்த அறிக்கையில் “இந்தியாவில்’ தற்போது இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  எனவே தற்போது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இந்த தடுப்பூசி போய்ச் சேரவேண்டிய நடவடிக்கைகளைச் செய்வதில் இரு நிறுவனங்களுக்கும் பொறுப்பு உள்ளது.

எனவே எங்கள் இரு நிறுவனங்களும் முழுமையான அளவுக்குத் தடுப்பூசிகள் தயாரிப்பதில் ஈடுபட உள்ளோம். இதன் மூலம் இந்தியா மட்டுமின்றி வேறு பல உலக நாடுகளுக்கும் நல்ல தரமான திறனுடைய தடுப்பூசிகளை அளிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்  இது நமது தலையாய கடமை ஆகும்.  திட்டமிட்டபடி கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்க எங்கள் இரு நிறுவனங்களும் பணிகளைத் தொடர்வோம்” என புனேவாலா மற்றும் கிருஷ்ணா எலா தெரிவித்துள்ளனர்.