ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா மருந்து பரிசோதனை: இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தம்

மும்பை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா மருந்து பரிசோதனை, இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து சோதனை செய்து வரும் தடுப்பு ஊசி பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த ஊசியானது, 2 கட்ட பரிசோதனைகளை தாண்டி 3ம் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்தியாவில் 3ம் கட்ட பரிசோதனைக்காக, அடுத்த வாரத்தில், 17 நகரங்களில் வசிக்கும் 1,600 பேரிடம் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், கடந்த சில நாட்களாக  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில்  ஒருவருக்கு எதிர்மறையான பக்க விளைவுகள் ஏற்பட்டிருப்பதை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். இதையடுத்து, தடுப்பூசி சோதனை உடனடியாக நிறுத்தப்பட்டது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு தர ஆணையம், சீரம் இன்ஸ்டிடியூட் அமைப்பிற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், அஸ்ட்ராஜெனிகா  மருந்து பரிசோதனை உலகம் முழுவதிலும் நிறுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் மட்டும் தொடர்வது ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தது.

இந்நிலையில், இந்தியாவில், இந்த மருந்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,  பிரிட்டனில் பரிசோதனை மீண்டும் துவங்கும் வரை, இந்தியாவிலும் கொரோனா மருந்து பரிசோதனையை நிறுத்தி வைத்துள்ளோம். சூழ்நிலைகளை ஆராய்ந்து, இந்தியாவிலும் சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.