டில்லி

க்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது.

உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் முடிவடையும் நிலையில் உள்ளன.   இவற்றில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா இணைந்து தயாரித்துள்ள கொரொனா தடுப்பூசியும் ஒன்றாகும்.  இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்ய உள்ளது.

உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதுவரை இந்தியாவில் சுமார் 94 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 2.72 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  கொரோனா பரவலைத் தடுக்கு இந்தியா கடும் முயற்சி எடுத்து வருகிறது.   அவ்வகையில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க மருந்து உற்பத்தியாளர்களுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதையொட்டி சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அதார் பூனேவாலாவுடன் நேற்று பிரதமர் மோடி ஒரு சந்திப்பை நிகழ்த்தி உள்ளார்.  அப்போது மோடி தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து விவாதித்துள்ளார்.  அதன் பிறகு கோவாக்சின் எனப்படும் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் சென்று பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.  அப்போது அவர் இந்தியாவில் விரைவில் தடுப்பூசி அளிக்க வேண்டும் என இரு நிறுவனங்களையும் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அதார் பூனேவாலா, “தற்போது வரை நடந்துள்ள சோதனைகளில் எங்களது தடுப்பூசி நல்ல திறனுள்ளதாக உள்ளது.  நாங்கள் இந்த சோதனையை 18 வயதுக்குப்பட்டோரிடம் நடத்தி வருகிறோம். நாங்கள் தயாரித்து வரும் கோவிஷீல்ட் என்னும் இந்த தடுப்பூசி உலக அளவில் நல்ல முடிவுகளை அளித்துள்ளது.

மேலும் இந்த மருந்து மூலம் மருத்துவமனைகளில் கூட்டம் வெகுவாக குறையும்.  அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் அது தீவிரமாகாமல் மருத்துவச் சிகிச்சைக்குத் தேவை இல்லாமல் இருக்கத் தடுப்பூசி உதவி செய்யும்.   முக்கியமாகப் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து மாற்றோருக்கு பரவாது.  இப்போது நாங்கள் 5 முதல் 6 கோடி டோஸ்கள் தயாரித்து வருகிறோம்.  ஜனவரிக்குள் இது 10 கோடி ஆகும்.

இந்த தடுப்பூசிகளை மக்களுக்கு அளிக்க இந்திய அரசிடம் அவசர அனுமதி கோரி இன்னும் 2 வாரங்களில் விண்ணப்பிக்க உள்ளோம்.  இந்திய அரசுக்கு இந்த மருந்து எத்தனை டோஸ்கள் தேவைப்படும் என இப்போது தெளிவாகக் கூற முடியாது.  ஆனால் ஜூலை 2021க்குள் இந்திய அரசுக்கு 30 முதல் 40 கோடி டோஸ்கள் நிச்சயம் தேவைப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.