முன்னாள் தலைமை நீதிபதி வீட்டில் துணிகர கொள்ளை

டில்லி

முன்னாள் டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் மனைவியையும் மகளையும் தாக்கி அவர்கள் பணியாளர் கொள்ளை அடித்து தப்பி உள்ளார்.

டில்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர்  தலிப் குமார் கபூர்.   இவர் தனது மனைவியான ரிபா கபூர் (வயது 78) உடன் தெற்கு டில்லியில் உள்ள நியூ ஃபிரன்ட்ஸ் காலனியில் வசித்து வருகிறார்.    தனிமையில் வசித்து வரும் இவர்களைக் காண தற்போது இவர்கள் மகள் அங்கு வந்துள்ளார்.

நேற்று முன் தினம் இரவு இவர் வீட்டில் வேலை செய்யும் பணியாளர் தனது கூட்டாளிகளுடன் வீட்டினுள் நுழைந்துள்ளார்.    ரிபா மற்றும் அவர் மகளை பணயமாக வைத்து கொள்ளை அடிக்க முயன்றுள்ளார்.   இதை கபூர் தடுக்க முயன்றதால் அவருடைய மனைவியையும் மகளையும்  தாக்கி உள்ளார்.   இதில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட கபூரின் மகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பணியாளர் தனது கூட்டாளிகளுடன் வீட்டை சூறையாடி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்.    அவைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் என தெரிய வந்துள்ளது.  கொள்ளை அடித்தவர்கள் நீதிபதியின் காரை எடுத்துக் கொண்டு தப்பி உள்ளனர்.  காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.