‘சர்வர் சுந்தரம்’ படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா? ? இயக்குநர் பால்கி ஆலோசனை

பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சர்வர் சுந்தரம்’. இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் 2016-ம் ஆண்டே முடிந்துவிட்டன.

தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் பலமுறை இந்தப் படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா ஊரடங்கால் முடக்கிவைக்கப்பட்டுள்ளது .

இது குறித்து இயக்குநர் ஆனந்த் பால்கி “உன் காசு என் காசு என்று சொல்லி, ஆக மொத்தம் ஒன்றுக்கும் உதவல. ‘சர்வர் சுந்தரம்’ படத்தை வெளியிட்டு இருக்கலாம் இல்லடா. ஆடி அடங்கும் வாழ்க்கையடா. ‘சர்வர் சுந்தரம்’ படம் ஏன் ரிலீஸ் ஆகவில்லை என்று கேட்கும் ரசிகர்களுக்கான பதில் இதோ.. தவறான வியாபாரிகளின் முதிர்ச்சியற்ற அணுகுமுறை, தேவையற்ற நபர்களின் தலையீடு, பொறுப்பான நபர்கள் கைவிட்டது, யாரும் இந்தப் படத்தின் ரிலீஸுக்கு உதவத் தயாராக இல்லை.

தொழில்நுட்பக் கலைஞர்களும், ரசிகர்களும் தொடர்ந்து எப்போது ரிலீஸ் என்று கேட்கிறார்கள். முரணாக இருக்கிறது. பொறுப்பில்லா ஒருவர் படத்தை வாங்க, பொறுப்புள்ளவர் பொறுப்பில்லாமல் நடப்பதன் பின்விளைவுதான். நம்பிக்கைதான் வாழ்க்கை. பொறுத்திருப்போம். இனிமேல் ரீலிஸைத் தவிர எதுவும் இல்லை அனுபவிக்க. ‘சர்வர் சுந்தரம்’ படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா?” என தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார் .