புவனேஸ்வர்: புரி ரத யாத்திரைக்கு சில மணி நேரங்கள் முன்பாக, சேவகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.

ஒடிசாவின் கோயில் நகரமான புரியில் புனித ரத யாத்திரை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜெகந்நாத் கோயிலின் ஒரு சேவகர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

பூரி மாவட்ட நிர்வாகமானது செவ்வாயன்று, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி 1143 சேவையாளர்களை பரிசோதித்ததாகவும், அவர்களில் ஒருவர் கொரோனா பாசிட்டிவ் ஆக உள்ளார் என்று தெரிவித்துள்ளது. அவர் எங்கு சென்றார், யார், யாருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ரத் யாத்திரையின் போது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் கோயில் நகரமான புரியில் ஒன்றுகூடுகிறார்கள். இருப்பினும், இந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக, உச்சநீதிமன்றம் ரத யாத்திரை கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 3 ரதங்களில் ஒவ்வொன்றும் 500 க்கும் மேற்பட்டவர்களால் இழுக்கப்படக்கூடாது, ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு ஒவ்வொரு தேரும் இழுக்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தது.