கொல்கத்தா :

மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.

முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க. அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைப்பது, பா.ஜ,க.வின் திட்டங்களில் ஒன்று.

மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா மே.வங்க மாநிலத்தில் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் செய்யும் நிலையில், மம்தா கட்சியை உடைக்கும் வேலைகள் உச்சம் தொட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை சவேந்து அதிகாரி மற்றும் சில்பத்ரா தத்தா ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஜிதேந்திர திவாரி, பானாஸ்ரீ மைதி ஆகிய மேலும் இரு எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து, மம்தாவுக்கு ஈ-மெயில் அனுப்பி உள்ளனர்.

இவர்களில் ஜிதேந்திர திவாரி என்பவர் நேற்று மாலை திடீரென பல்டி அடித்துள்ளார்.

“நான் ராஜினாமா செய்யவில்லை. மம்தா தான் எனது தலைவர்” என அவர் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சில்பத்ரா தத்தா “தேர்தல் வியூக வகுப்பாளரும், ஐபேக் நிறுவன உரிமையாளருமான பிரசாந்த் கிஷோர், கட்சியின் செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதால் திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன்” என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

– பா. பாரதி