மயிலாடுதுறையில், அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் அலுவலகத்தை அமையுங்கள்..  ஆட்சியருக்கு நாகைமாவட்ட ஐஎன்ஆர்எல்ப் தலைவர் கோரிக்கை

மயிலாடுதுறை:

யிலாடுதுறையில், அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் அலுவலகத்தை விரைவில் அமையுங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு நாகை மாவட்ட ஐஎன்ஆர்எல்ப் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் 38வது மாவட்டமாக  மயிலாடுதுறை உதயமானது. அந்த  மாவட்டத்தின் எல்லைகளை வரை செய்யும் வகையில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி,  மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு எல்லை வரையறை செய்வதற்காக சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் அலுவலகத்தை விரைவில் அமைக்கும்படி,  இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம் (INRLF) நாகை மாவட்டத் தலைவர் இரா. கலிய மூர்த்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்து உள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது,

நாகப்பட்டினம், மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முடிய 1லட்சத்து 10ஆயிரம் அமைப்பு சாரா மற்றும் கட்டுமான நலவாரியங்களில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் பல பேருக்கு கல்வி உதவியும், இறப்பு உதவியும், விபத்து மரண உதவியும், மாதாந்திர ஓய்வுதியமும் ஓராண்டாக வழங்கப்படவில்லை. மேலும்,

பதிவு செய்யப்பட்டுள்ள இந்த 1,10,000 உறுப்பினர்களில் தற்போது பிரிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளான தரங்கம்பாடி, சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய நான்கு வருவாய் தாலுக்காக்களில் மட்டும் 75ஆயிரம் உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பபிடத்தக்கது.

ஆகையால் உடனடியாக உறுப்பினர்களின் நலன் காக்கவும், சமூக நலத்திட்டங்கள் விரைவாக தொழிலாளர்க்கு கிடைக்கவும், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நாகப்பட்டினத்திலிருந்து, பிரித்து மயிலாடுதுறையில் அமைக்க விரைந்து ஆவண செய்யுமாறு, பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.