சென்னை:

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கூடுதலாக 63 ஷராமிக் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகம் மட்டும் 10 ரயில்களை இயக்க கோரிக்கை வைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே மத்தியஅரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நாடு முழுவதும் கடந்த மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில், மீதமுள்ளவர்களையும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப மேலும் பல ஷராமிக் ரயில்கள் இயக்க வேண்டும் என  தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 7 மாநிலங்கள் சார்பில் கூடுதலாக 63 ரயில்கள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகவும்,  அதன்படி ஆந்திரம்- 3, குஜராத் – 1, ஜம்மு காஷ்மீர் – 9, கர்நாடகம்- 6, கேரளம்- 32, தமிழகம் – 10, மேற்கு வங்கம் -2 என்ற எண்ணிக்கையில் கூடுதல் ரயில்கள் இயக்க  வலியுறுத்தி இருப்பதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்து உள்ளது.