சென்னை:

நா.காமராசன் உள்பட ஏழு தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

மறைந்த பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.காமராசன், எம்ஜிஆர் படங்களுக்கு பாடல்களை எழுதிய கவிஞர்கள் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் உள்பட 7 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

ஏற்கனவே பல அறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு,  உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்,  நா.காமராசன், முனைவர் இரா இளவரசு, தமிழறிஞர் அடிகளாசிரியர், புலவர் இறைக்குருவனார், பத்திரிகையாளர் பாபநாசம் குறள்பித்தன் , பண்டிதர் ம.கோபாலகிருட்டிணன் ஆகியோரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

இந்த ஏழு தமிழறிஞர்களின் மரபு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 35 லட்சம் ரூபாய் பரிவுத்தொகை வழங்கப்பட உள்ளது. முதல்வரிடம் பரிவுத்தொகையை பெறுவதற்காக வந்து போகும் பயணச்செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும், இதுவரை 149 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டிருப்பதாகவும்,  அரசு வெளியிட்டுள்ள  அரசாணையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.