ஹைதராபாத்

தெலங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 மாதக் குழந்தையும் அடங்கும்.

சமூக விலகலே கொரோனா பரவலைத் தடுக்கும் முதன்மைக் காரணி என்பதால் மே 3 வரை பிரதமர் ஊரடங்கை நீட்டித்துள்ளார்.

இந்திய அளவில் 10363 க்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹைதராபாத்தில் அதிகாரிகள், “கொரோனா உறுதி செய்யப்பட்ட 17 பேரும் காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களோடு தொடர்பிலிருந்த 24 பேருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதியானதால், தனிமைப் படுத்தலுக்காய் அவர்கள் நிஜாமியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்” எனக் கூறினர்.

ஒரு குடும்பம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவர்களின் வசிப்பிடப் பகுதி முழுமையும் தற்போது சீல் வைக்கப்பட்டு, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.