கடும் பஞ்சத்தில் மராட்டியப் பகுதிகள் – மெத்தனப் போக்கில் அரசு!

நாக்பூர்: மராட்டிய மாநிலத்தில், பாலுக்கும் கால்நடைகளுக்கும் பெயர்பெற்ற மராத்வாடா பகுதியில், இப்போது கடும் பஞ்சம் நிலவி வருகிறது. பல விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல், அவற்றை மிகவும் குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர்.

மராட்டிய மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை அடுத்து, அம்மாநிலத்திலுள்ள மொத்தம் 358 தாலுகாக்களில், 180 -ஐ பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது மாநில அரசு.

அம்மாநில ஒஸ்மனாபாத் மாவட்டத்தின் பூம் தாலுகா, பாலுக்கும் கால்நடைகளுக்கும் மிகவும் பெயர் பெற்றது. ஆனால், இந்தப் பஞ்சத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் தீவன தட்டுப்பாட்டால், அப்பகுதியில் பலரும், தங்களின் கால்நடைகளை வந்த விலைக்கு விற்கின்றனர். இதனால், அவர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டாலும், வேறு வழியில்லை என்ற நிலைமையே உள்ளது.

இந்த பூம் தாலுகாவில் மட்டும், 187 மாட்டுத் தீவன முகாம்களின் தேவை உள்ள நிலையில், அப்பகுதியில், இதுவரை ஒரு முகாமைக்கூட மாநில அரசு அமைக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

மராத்வாடா பகுதியின் மிக முக்கிய பால் உற்பத்தி கேந்திரமான பூம் தாலுகாவின் விவசாயிகள், பஞ்சத்தால், தங்களின் பயிர் வருமானத்தை இழப்பதோடு, இன்னொரு முக்கிய வருவாயாக உள்ள கால்நடை செல்வங்களையும் இழக்கும் பரிதாப நிலையில் உள்ளனர்.

– மதுரை மாயாண்டி