சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை

சென்னை நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரை சாலைகள் அடைக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் அச்சம் நிலவி வருகிறது.  அத்துடன் உருமாறிய கொரோனா தாக்கமும் பல நாடுகளில் காணப்படுகிறது.  எனவே தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பல நாடுகளில் இன்றைய புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   ஒரு சில நாடுகளில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்றைய புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  மெரினா கடற்கரையில் அனைத்து கொண்டாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.  மேலும் பெசண்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை, காசி மேடு, எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது,.  இதையொட்டி பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல முடியாத படி சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

சென்னை நகர் முழுவதும் பல இடங்களில் சுமார் 12000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.   சுமார் 300 இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெறுகிறது.  நகரில் உள்ள கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கும் இரவு 10 மணி வரை மட்டுமே கொண்டாட அனுமதிக்கப்பட உள்ளது.