சென்னை: கட்சி தொடங்குவதை கைவிட்ட ரஜினிகாந்த் கடும் மன வருத்தத்தில் இருப்பதாக அர்ஜூன மூர்த்தி கூறி உள்ளார்.

பல ஆண்டுகளாக ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து செய்திகள், தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் ஜனவரியில் கட்சி உறுதி, டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என்று அறிவித்தார் ரஜினிகாந்த்.

குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனையில் ஈடுபட்டார். அன்றைய தினத்தில் கூட, ரஜினி உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து, அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் ரஜினி தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகும் எனக் கூறப்பட்டது.

இந் நிலையில் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் 3 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ரஜினியின் அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தபொழுது அர்ஜூன மூர்த்தி என்பவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியனை கட்சி மேற்பார்வையாளராகவும் அறிவித்திருந்தார்.

இந் நிலையில், ரஜினியின் தற்போதைய அரசியல் முடிவு பற்றி அர்ஜூன மூர்த்தி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: ரஜினி கடும் மனவருத்தத்தில் உள்ளார் என்பது எனக்கு தெரிகிறது. கட்சித்தொடங்கவில்லை என்ற அவரது முடிவுக்கு முழு ஆதரவை தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.