வாஷிங்டன்,
டொனால்டு டிரம்ப் மீதான பாலியல்  குற்றச்சாட்டுக்கு அவரது மனைவி மெலானியா டிரம்ப் மறுப்பு தெரிவித்து உள்ளார். அவர் ஒரு ஜென்டில்மேன் என்று கூறியுள்ளார்.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக  தொழிலதிபர் டிரம்பும் களத்தில் உள்ளனர்.
தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையில்,  டொனால்டு டிரம்ப் மீது ‘செக்ஸ்’ வீடியோ புகார் எழுந்தது. அதில் பெண்கள் பற்றி அவர் இழிவாக கூறியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதையடுத்து பல பெண்கள் டிரம்ப் மீது நேரடியாக ‘செக்ஸ்’ குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஆனால், டிரம்ப் இதை அவர் மறுத்தார். தான் ஒருபோதும் அப்படி பேசவில்லை என்றார். இதன் காரணமாக பெண்களிடம் அவரது செல்வாக்கு சரிந்தது.
இதனால் களத்தில் இறங்கினார் டிரம்பின் மனைவியும்,  முன்னாள் மாடல் அழகியுமான மெலானியா.
அவர் கூறியதாவது:  பெண்கள் பற்றி இழிவான கருத்துக்களை டிரம்ப் கூறியதாக வெளியான வீடியோ டேப் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் டிரம்ப் மீது பெண்கள் கூறிய ‘செக்ஸ்’ புகார்கள் பொய்யானவை என்றார்.
ஏனெனில் எனது கணவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு ‘ஜென்டில்மேன்’.
அவர் எப்போதும் இது போன்ற தவறுகள் செய்யமாட்டார். பெண்கள் மீது அவருக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றார்.
மேலும் தனது கணவர் மீது கூறப்பட்டுள்ள செக்ஸ் புகார்களை மறுத்து பெண்களிடம் பிரசாரம் செய்து வருகிறார்.