பாலியல் வழக்குகளை 6மாதத்துக்குள் முடியுங்கள்! உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு மத்தியஅமைச்சர் கடிதம்

டெல்லி:

பாலியல் தொடர்பான வழக்குகளை 6மாதத்துக்குள் முடியுங்கள் என்று அனைத்து மாநில உயர்நீதி மன்றங்களுக்கும்  மத்தியஅரசு கடிதம் எழுதி உள்ளதாக மத்திய சட்டஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.

சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே  இளம் பெண்மருத்துவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்ட ரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதுதான் சரி என்று, காவல்துறையினருக்கு புகழாரம் சூட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் பாலியல் வழக்கு தொடர்பாக கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

அந்த கடிதத்தில், பாலியல் பலாத்கார வழக்குகள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுபோல, அனைத்து  மாநிலங்களின் முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாலியல் மற்றும் போக்சோ சட்டப்படியான  வழக்குகளில் 2 மாதங்களில் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் வழக்குகளை விரைந்து முடிக்க மேலும் 1023 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என கூறினார்.

நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரணை நடத்த, ஏற்கனவே 700 விரைவு நீதி மன்றங்கள் உள்ள நிலையில், புதியதாக 1023 நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டால், மொத்த எண்ணிக்கை 1723 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.